தோரணமலை முருகன் கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம், தவம், தியானம், விருட்சம் ஆகிய ஆறு அம்சங்களால் சிறப்புற்று விளங்குகிறது. தோரணமலை முருகனை வணங்கி அன்பு, பரிவு, பாசம், ஞானம், வரம், சாந்தம் ஆகிய ஆறுவகைக் குணங்களை பெறலாம்.
காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று பகைகளையும் வென்று மற்றுமுள்ள வலிய பகையான அகந்தையை அகற்றி, உடலில் பொருந்தியுள்ள ஐம்புலன்களை வெற்றிகொண்டு, தவம்செய்து, சிறப்புமிக்க அறிவாற்றலைப் பெற்று உய்வு பெறுவதற்கு தோரணமலை முருகன் அருள்பாலிக்கிறான்.
ஊமையாகப் பிறந்த குமரகுருபரருக்குப் பேசும் ஆற்றல் அளித்து, இலக்கியத் தமிழ் அறிவு வழங்கி, அவரை கந்தர் கலிவெண்பா பாட வைத்தான் திருச்செந்தூர் முருகன். பிறவி ஊமையான பொன்னரங்கன் என்ற சிறுவனை தேரையர் சித்தர் என்று உருவாக்கி, பேச்சாற்றல் வழங்கி, 21-க்கும் மேற்பட்ட சித்த மருத்துவ நூல்களை இயற்ற வைத்தான் தோரணமலை முருகன்.
குமரன் குறிஞ்சிநிலக் கடவுள். குறிஞ்சி நிலத்தில் காணப்பெறும் மலைக் குகைகளில் கோயில் கொண்டுள்ளமையால் முருகனை குகன் என்றழைப்பர். மனிதனுடைய உள்ளத்திலிருக்கும் அறியாமை எனும் இருளைப் போக்குவதற்கு மனிதனின் இதயக் குகைக்குள் ஆண்டவன் ஒளியாக இருக்கிறான். இதனால் குகன் என்னும் பெயர் வந்தது. முருகப் பெருமானுடைய ஈரெழுத்து மந்திரப்பெயராக குகா நாமம் விளங்குகிறது. குகா என்று கூறும் அடியவர்கள் துன்பக் கடலினின்றும் கரையேறப் பெறுவார்கள்.
தம் பத்தினி கடத்தப்படவிருக்கிறாள் என்பதையறியாது அவள் விரும்பிக்கேட்ட மானைத்தேடி ராமபிரான் தோரணமலைக்கு வந்தபோது, முருகப்பெருமானை வழிபாடு செய்த பிறகே, தாம் தேடியது மாயமான் என்பதை உணர்ந்து அதைத் தேடுவதைக் கைவிட்டாராம். மலை மீதுள்ள ராமர் பாதம் இதற்குச் சான்று பகருகிறது. பிற்காலத்தில் கடையத்தில் வாழ்ந்தபோது இதனையறிந்த மகாகவி பாரதியார் தோரணமலை முருகனை ‘குகையில் வளரும் கனலே’ என்று போற்றிப் பாடியுள்ளார்.
கயிலையில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருக்கல்யாணம் நிகழ்வுற்ற நேரம் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தபோது அதைச் சமன்செய்ய பொதிகைமலைக்கு வருகைபுரிந்த அகத்தியர் தோரணமலையில் முருகப்பெருமான் சிலையை நிறுவி வழிபட்டதுடன் மூலிகை ஆராய்ச்சி செய்தும் மருத்துவமனையை நிறுவி சிகிச்சையளித்தும் வந்தார். அப்போது கபாடபுரத்திலுள்ள இரண்டாம் தமிழ்ச் சங்கப் புலவர் திரணதூமாக்னி, காசிவர்மன் என்ற பாண்டிய மன்னர் உள்பட பலபேருக்கு ரணசிகிச்சையளித்து, கபாலத்தைத் திறந்து ஜலநேத்தி பழக்கத்தின் காரணமாக மூளைக்குள் புகுந்துவிட்ட தேரையை அகற்றிச் சாதனை புரிந்தார். இதுவே உலகின் முதல் மண்டையோட்டு அறுவை சிகிச்சையாகக் கருதப்படுகிறது.
தற்போது சகலவிதமான நோய் தீர்க்கும் தலமாக தோரணமலை விளங்குகிறது. அறுவை சிகிச்சை வெற்றிபெற மருத்துவர்களும் நோயாளிகளும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். இங்கு 64-க்கும் அதிகமான மருத்துவ குணம்மிக்க சுனைகள் உள்ளன. மலை உச்சியிலுள்ள ஒரு குகைக்குள் முருகன் ஞானசக்தி சொரூபமாக அபய வரத ஹஸ்தத்துடன், கிரீடம் அணிந்து தேவமயில் வாகனத்துடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளான். முருகன் அன்னதானப் பிரியர் என்பதால் தமிழ் மாதம் கடைசி வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் அன்னதானமும் நடக்கிறது.
தைப்பூசம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அசுரர்களை அழிக்க அன்னை பராசக்தி முருகப் பெருமானிடம் வேல் வழங்கிய நாள் தைப்பூசம். எனவே தைப்பூசத்தன்று சிறந்த வரப்பிரசாதியான தோரணமலை முருகனை வேல் வழங்கி வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லை ஒழியும் என்று நம்பப்படுகிறது.
செல்லும் வழி
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி-கடையம் நெடுஞ்சாலையில் கடையம் அருகேயுள்ள செக்போஸ்ட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்புறமாக தோரணமலை அமைந்துள்ளது. முறையே திருநெல்வேலியிலிருந்து 55 கி.மீ., தென்காசியிலிருந்து 10 கி.மீ., பாவூர்சத்திரத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் தோரணமலை உள்ளது.