சென்னை: சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 50-வது ஆண்டு பொன் விழாமற்றும் ஆண்டுத் பெருவிழா‘அன்னை மரியா நம் பயணத்தின் வழித்துணை’ என்ற தலைப்பில் கடந்த ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று நடைபெற்றது. தேர்ப்பவனியைச் சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நேற்று மாலை தொடங்கி வைத்தார். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி, பெசன்ட் நகர் ஆலயத்திலிருந்து புறப்பட்டது.
ஆலய வளாகத்திலிருந்து புறப்பட்ட தேர் பவனி, பெசன்ட்நகர் கடற்கரைச் சாலை, பெசன்ட் நகர்4-வது பிரதான சாலை மற்றும் 2 மற்றும் 7-வது அவென்யூ வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த தேர் பவனியில் சென்னை மற்றும் அதைச் சுற்றிஉள்ள பகுதிகளில் உள்ள பக்தர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். முன்னதாக நேற்று காலை முதல் பிற்பகல் வரை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில், உயர் மறைமாவட்ட குருக்களோடு இணைந்து ஆடம்பர திருப்பலி நடந்தது.
இந்நிலையில், விழாவின் இறுதி நாளான இன்று (செப். 8) அன்னையின் பிறப்பு பெருவிழா நடைபெற உள்ளது.
இதையொட்டி, திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் அன்னைக்கு முடிசூட்டு விழாவும், கொடியிறக்க நிகழ்வும் நடைபெற உள்ளது.