பாற்கடல் நாயகனாகிய திருமால் எடுத்த அவதாரங்கள் பல. அவர் அர்ச்சாவதார மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ஸ்தலங்களும் பல. அவ்வாறான ஸ்தலங்களில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தென்காசிக்கு அருகே உள்ள நன்னகரமும் ஒன்று. ஹர ஹர ஷேத்திரமாக விளங்கும் இங்குள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலின் ஸ்தல வரலாறு மிகவும் ரசமானது.
பாண்டிய மன்னர்கள் காலத்தில் இவ்வூர் தென் வாரிவள நாட்டு நன்னகரம் தென்வாரிவள நாட்டு சதுர்வேதி மங்கலத்து நன்னகரம் என்று விளங்கி இருந்ததாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. இருப்பினும் இங்கு பிரச்சன்ன வெங்கடாசலபதி நின்ற கோலத்தில் தேவி, பூதேவியுடன் நிலைகள் அழிவில்லா பரம சொரூபியாக எழுந்தருளி அருள் வழங்கி வருகிறார். அவருடைய திவ்ய ரூபலா லீலைகள் பல.
குலசேகர பாண்டிய மன்னன் ஆட்சி செய்துகொண்டிருந்த போது அவனது அரசவைக்கு கர்க முனிவர் வந்தார். அவரை வரவேற்ற மன்னன், தன் மனம் நிம்மதியின்றி இருப்பதாக முனிவரிடம் கூறினான். இதைக் கேட்ட முனிவர், “ஆசாபாசம் உள்ள உன் மனம் இருண்டு போய் உள்ளது. அதில் ஆண்டவனின் ஒளி பட்டால் பிரகாசிக்கத் தொடங்கிவிடும். வெறும் பனித்துளி ஒளிவிடாது சூரியனின் பொற்கதிர் பட்டால்தான், அதுவும் பிரகாசமாகத் தெரியும். எனவே நீ தென்வாரி நாடு சென்று அங்கு இந்திரன் முதலான தேவர்கள் வணங்கிய வெங்கடாசலபதிக்கு ஒரு கோவிலை அமைத்து கோவிலைச் சுற்றி நகரம் அமைத்து திருப்பணிகள் செய்தால் உன் மனது நிம்மதி அடையும். நீயும் இறை நிலை அடைவாய். நீ வேறு ஏதும் சிந்திக்காமல் அந்த நன்னகருக்குச் செல்” என்று அறிவுரை கூறினான்.
இதைக் கேட்ட மன்னன் மகிழ்வடைந்து அத்தலம் சென்று தன் படை வீரர்களுடன் பல மாதங்கள் தங்கியிருந்து இந்திரன் முதலான தேவர்கள் வணங்கிய பிரசன்ன வெங்கடாசலபதிக்கு திருக்கோவில் அமைத்தான். நித்யபூஜைகள், பெருவிழாக்கள் தடையின்றி நடைபெற வழி வகை செய்து ஹரியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தான்.
இதில் மகிழ்ந்த பெருமாள், ஒரு நாள் வேதம் பொழியும் திருவாயுடன் பல கோடி சூரியன்கள் ஒரு வடிவெடுத்தது போலப் பரஞ்சுடராக மன்னனுக்குக் காட்சி தந்தருளினார். மன்னனும் மற்றையோரும் மனம் மகிழ்ந்து பகவானின் திருப்பெயரை ஓதி, ‘சரணம்… சரணம்’ என்று இறைஞ்சினர். அவர்களை எழுக என்று அருள் புரிந்த இறைவன் மன்னனிடம் வேண்டும் வரம் என்ன என்று கேட்டார். அதற்கு மன்னன் “பகவானே தாங்கள் எழுந்தருளிய இந்த நன்னகரில் தாங்கள் தேவியர்களுடன் நித்ய வாசம் செய்தருள வேண்டும்” என்றான்.
இந்நகரம் நிலமகளுக்குக் கண் போன்றது என்று பதில் அளித்தார் கடவுள். இங்குள்ள மக்களால் ஈட்டப்படும் செல்வம் குபேரனுடைய செல்வத்தைப் போன்றது. மறை ஓதும் அந்தணர்கள் வசிக்கும் வீதிகளில் உள்ள சிறுவர்கள்கூட இனி வேதத் தொடர்களை உரைப்பார்கள். இத்தலம் வந்து எவன் ஒருவன் ஐவகை வேள்விகள் செய்து ஆறு தொழிலும் விதியால் செய்து முடிக்கிறானோ அவன் ஞான நெறிக்குக் காரணமாக விளங்குவான்” என்று பகவான் உரைத்தார்.
நியமங்களை உடைய முனிவர்களும் கலியின் தொடர்பு நீங்க இத்தலத்தில் பல வேள்விகள் செய்துள்ளனர். இத்தலத்தில் மழைக்குக் காரண மாகச் செய்யும் சாதாரண வேள்விகூட எம்மை சந்தோஷப் படுத்தும் என்று கூறி அனைவரும் பார்த்திருக்கும் போதே மறைந்தார்.
இதைக் கண்ட தன்னலம் வேண்டாத அந்தக் கார்வேந்தன் சில காலம் அங்கு இருந்து பின் தன் இருப்பிடம் சென்றான். இம்மன்னன் அமைத்த பல கோவில்கள் தாமிரபரணிக் கரையில் உள்ளன. இவனது பெயரால் குலசேகரப் பட்டினம் என்ற ஊரும் உள்ளது.
இது போன்ற பல வரலாற்றுப் பெருமைகளும் புராணப் பெருமைகளும் கொண்ட நன்னகரம் வெங்கடாசலபதி பெருமாள் கோவில் கி.பி. 13ம் நுhற்றாண்டில் உருவானது தற்போது சிதிலம் அடைந்து காணப்படுகிறது. பக்தர்களது முயற்சியால் நித்ய பூஜைகளும் சிறு விழாக்களும் நடந்துவருகின்றன. தற்போது இக்கோவிலைச் சீரமைத்துக் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வேதங்களும் ஆகமங்களும் காட்ட முடியாத முத்திரள் வடிவத்தைக் காட்டி அருளும் அந்த வேத நாயகன் திருக்கோவில் புதுப்பொலிவு பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.