மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகம் (அடுத்த படம்) விழாவில் பங்கேற்ற திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் | படங்கள்: வீ. தமிழன்பன் 
ஆன்மிகம்

மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: மயிலாடுதுறையில் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பழமைவாய்ந்த அபயப்பிரதாம்பிகை சமேத மாயூரநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்த நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி ஆக.30-ம் தேதி மாலை, முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. 123 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 175 சிவாச்சாரியார்கள் பங்கேற்று யாக பூஜைகளை நடத்தினர். 108 ஓதுவார்கள், 40 வேத விற்பனர்கள் கலந்துகொண்டு தேவாரம், திருவாசகம், வேதபாராயணம் நிகழ்த்தினர்.

நேற்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைக்குப் பின், மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 7.35 மணியளவில் மாயூரநாதர், அபயப்பிரதாம்பிகை உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளின் விமானங்களுக்கும், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவில், செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்யஞான பரமாச்சாரிய சுவாமிகள், துழாவூர் ஆதீனம் 29-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட எஸ்.பி மீனா, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இரவு திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி மயிலாடுதுறையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT