சீ
ன மூங்கில் விதை விதைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு அந்த மண்ணில் ஒரு சிறு முளையைத் தவிர வேறெதையும் காணமுடியாது. ஆனால் மூங்கில் மண்ணுக்குக் கீழே வளர்கிறது; அதன் சிக்கலான வேர்த்தொகுதி பக்கவாட்டிலும் செங்குத்தாகவும் விரிந்துகொண்டே செல்கிறது.
ஐந்தாம் ஆண்டின் இறுதியில் சீன மூங்கில், வேகமாக வளரத் தொடங்கி 25 மீட்டர்வரை வளர்ந்து நிற்கிறது.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் சீன மூங்கிலைப் போன்றுதான் வளர்ச்சி இருக்கிறது. பணியாற்றுகிறோம்; காலத்தையும் ஆற்றலையும் முதலீடு செய்கிறோம். வளர்ச்சிக்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்கிறோம். வாரக்கணக்கில், மாதக்கணக்கில், ஏன் ஆண்டுக்கணக்கில்கூட எந்தப் பலனையுமே பார்ப்பதில்லை.
ஆனால் தொடர்ந்து காத்திருக்கும் பொறுமை இருக்குமானால், உறுதியும் நம்பிக்கையும் இருக்குமானால், நமக்கும் சீன மூங்கிலைப் போலவே ஐந்தாம் ஆண்டு வளர்ச்சி வரும். கனவிலும் கண்டிராத மாற்றங்கள் தென்படத் தொடங்கும்.
மிகப் பெரிய உயரங்களை அடைவதற்கு மிகுந்த தைரியம் தேவை. அதேவேளையில் இங்கே நிலைத்திருக்க சீன மூங்கிலைப்போல் வேர் விட்டிருக்கும் ஆழமும் தேவை.