மண் மாரி பொழிவில் இருந்து மக்களைக் காத்த உறையூர் வெக்காளியம்மன், இன்றைக்கு பக்தர்களுக்கு பிரார்த்தனைச் சீட்டு மூலம் தீர்வு அளிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூரின் எல்லையில் வீற்றிருந்து மக்களைக் காத்துவந்த வெக்காளியம்மன், தன்னை நாடி வந்தவர்களைக் கைவிட மாட்டார் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால நம்பிக்கை.
உறையூரை வன்பராந்தகன் என்ற அரசன் ஆட்சி செய்தபோது, சாரமா முனிவர் என்பவர் நந்தவனம் அமைத்து அதில் பூக்கும் மலர்களைப் பறித்து, மலைக்கோட்டை தாயுமான சுவாமிக்கு நாள்தோறும் அணிவித்து வணங்கிவந்துள்ளார்.
மலர் வணிகம் செய்யும் பிராந்தகன் என்பவர் அரசரின் ஆதரவு கிடைப்பதற்காக, சாரமா முனிவரின் நந்தவனத்தில் இருந்து அழகிய மலர்களாகப் பறித்து மன்னருக்குக் கொடுத்து வந்துள்ளார். நந்தவனத்தில் தினமும் மலர்கள் குறைவதைக் கண்ட முனிவரிடம் பிராந்தகன் ஒரு நாள் கையும் களவுமாக சிக்கினார்.
மன்னருக்காகத்தான் பறிக்கிறேன் என்ற பிராந்தகன் கூற, மன்னரிடம் சென்று முனிவர் முறையிட்டார். ஆனால், மன்னன் அவரை அலட்சியம் செய்ததுடன், தொடர்ந்து மலர் பறித்துவரப் பிராந்தகனை ஊக்குவித்தார். இந்தச் செய்கையால் மனம் நொந்த சாரமா முனிவர், தாயுமான சுவாமி சன்னதியில் சரணாகதி அடைந்து முறையிட்டார்.
கடவுளின் கோபம்
தனக்கு நடக்கும் இடர்களைக்கூடத் தாங்கிக் கொள்ளும் இறைவன், அடியார்க்கு வரும் இடர்களை அறிந்து கோபம் கொண்டார். மேற்கு முகமாக இருக்கும் உறையூரைத் தாயுமான சுவாமி நோக்கியதால், மண் மாரி பொழியத் தொடங்கியது. இதனால் உறையூர் முழுவதும் மண்ணால் மூடியது.
மரண ஓலமிட்டவாறு ஓடிய மக்கள், காக்கும் கடவுளான எல்லை தெய்வமாக வடக்கு நோக்கி வீற்றிருந்த வெக்காளியம்மனிடம் சரணடைந்தனர். ஊர் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என தாயுமான சுவாமியை அம்மன் வேண்டினார். உடனே மண் மாரி நின்றது. ஆனாலும், மக்கள் வீடிழந்து வெட்டவெளியில் வாழ்ந்தனர். மக்களின் துயரம் கண்ட வெக்காளியம்மன், நாட்டில் வாழும் “அனைவருக்கும் வீடு கிடைக்கும்வரை நான் வெட்ட வெளியிலேயே வீற்றிருப்பேன்” என்று கூறியதாகக் கோயில் வரலாறு கூறுகிறது.
இன்றும் நம் நாட்டில் பலர் வீடின்றி வசிப்பதால், அம்மனின் உறுதிமொழி நிறைவேறவில்லை. அதனால் வெக்காளியம்மன் இன்றைக்கும் வானத்தையே கூரையாகக் கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மண் மாரி பொழிவில் இருந்து காத்த அம்மனிடம் சரணடைந்த மக்கள், அப்போது முதல் தங்களுக்கு நேரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, துண்டு சீட்டில் எழுதி அம்மன் பாதத்தில் வைத்து வணங்குவார்கள். பிறகு கருவறைக்கு நேர் எதிரில் இருக்கும் சூலத்தில் அதைக் கட்டிவிடுவது வழக்கமாக இருந்துள்ளது.
பிரார்த்தனைக் கடிதங்கள்
குடும்பப் பிரச்சினை, தொழில் நஷ்டம், கடன் தொல்லை, கல்வி, நோய் நொடியின்றி நலமுடன் வாழ எனப் பல்வேறு கோரிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க, இதுபோன்ற பிரார்த்தனைக் கடிதங்கள் கட்டுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது.
இதையடுத்து, கோயில் நிர்வாகம் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாக இருக்கும் வகையில் பிரார்த்தனைச் சீட்டு என்ற பெயரில் அச்சடித்து வழங்குகின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தது 300 சீட்டுகள் வரை வழங்கும் கோயில் நிர்வாகம், கடந்தாண்டு மட்டும் 80 ஆயிரம் பிரார்த்தனைச் சீட்டுகளை வழங்கியுள்ளது.