ஆன்மிகம்

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு 22 வகை பழங்களால் பலோத்ஸவம்

செய்திப்பிரிவு

சென்னை: மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு 22 வகையான பழங்களால் பலோத்ஸவம் நேற்று நடைபெற்றது.

சென்னை மயிலாப்பூர் கேசவப்பெருமாள் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் சுமார் 350 ஆண்டு பழமையான கோயிலாகும். இந்த கோயிலில் ஸ்ரீ வேதாந்த தேசிகருடன், ஸ்ரீஹயக்ரீவர் அருள்பாலித்து வந்த நிலையில், னிவாச பெருமாள் உடன் அலர்மேல் மங்கை தாயார் (பத்மாவதி தாயார்) சந்நிதியும் கட்டப்பட்டது. இதில் ஸ்ரீனிவாச பெருமாள் சந்நிதி ‘தி இந்து குழுமம்’ சார்பில் 1924-ம் ஆண்டு கட்டப்பட்டது.

மேலும், ராமர், லட்சுமி நரசிம்மர், ராமானுஜர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார் ஆச்சாரியர்கள், கருடன், அனுமன் சந்நிதிகளும் இக்கோயிலில் உள்ளன. இந்நிலையில், ஸ்ரீனிவாச பெருமாள் சந்நிதி கட்டப்பட்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த கோயில் வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஏப்.1-ம் தேதி மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் உள்ள ஏரியில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

இதையடுத்து, ஏப்.18-ம் தேதி நூற்றாண்டு விழா தொடங்கியது. தொடக்க விழாவை, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீவராக மகாதேசிகன் தொடங்கி வைத்தார். 100-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு மாதமும் கோயிலில் உற்சவ நிகழ்ச்சிகள், இசை, நாட்டியம், சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஸ்ரீனிவாச பெருமாளுக்கு நேற்று பலோத்ஸவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஸ்ரீஸேனைநாதன் பழங்களுடன் மாட வீதிகளில் உலா வந்தார். பின்னர் 5.30 மணிக்கு ஸ்ரீனிவாச பெருமாள், உடன் அலர்மேல் மங்கை தாயார் வாகன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து நிர்மலா ராஜசேகர் குழுவினரின் வீணை கச்சேரி நடைபெற்றது. 7 மணிக்கு னிவாச பெருமாளுக்கு 22 வகையான பழங்கள் வைத்து திருவாராதனம் நடைபெற்றது. பின்னர் அந்த பழங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT