ஆன்மிகம்

கல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி! எம பயம் போக்கும் ஞீலிவன நாதர்!

வி. ராம்ஜி

’இன்னும் பொண்ணுக்கு கல்யாண வரன் தகையலையே...’ என்று பெண்ணைப் பெற்றவர்கள் புலம்பக் கேட்டிருப்போம். ‘நல்ல படிப்பும், கை நிறைய சம்பளமும்னு உத்தியோகமும் இருந்தும், என்ன புண்ணியம். பையனுக்கு கல்யாணம் மட்டும் தள்ளிக்கிட்டே போவுதே’ என்று மகனைப் பெற்றவர்களும் கலங்கித் தவிப்பார்கள். கவலையே வேண்டாம்... திருப்பைஞ்ஞீலி எனும் கல்யாண வரம் தந்தருளும் அற்புதமான தலத்துக்கு வந்து, வேண்டிக் கொண்டால் போதும்... சீக்கிரமே கல்யாண மாலை தோள் சேரும் என்கிறார்கள் பக்தர்கள்!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மண்ணச்சநல்லூர். இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம்.. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு.

கல்யாணத் தடை, ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் சரியில்லை, களத்திர தோஷம் என்று எதுவாக இருந்தாலும் சரி... ஒரே ஒரு முறை, திருப்பைஞ்ஞீலி தலத்துக்கு வந்து, பரிகாரங்களைச் செய்து சிவனாரை வேண்டிச் சென்றால் போதும்... விரைவில் கல்யாண வரம் வந்துசேரும். வீட்டில் கெட்டிமேளம் கேட்கும் என்பது என்பது உறுதி! அதனால்தான் இந்தத் தலத்தில் வருடம் 365 நாளும் திருமண பரிகாரம் நடந்துகொண்டிருக்கிறது.

ஞீலி என்றால் வாழை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை என்று அர்த்தம். ஒருகாலத்தில் இந்த இடம் மிகப்பெரிய வாழைத் தோப்பாக இருந்தது. அப்படி வாழை சூழ்ந்த இந்த இடத்தில், சிவனார் குடிகொண்டதால், ஈசனுக்கு ஞீலிவன நாதர் என்றே திருநாமம். ஊரின் பெயரும் அதுவாயிற்று. இந்தத் தலத்தின் விருட்சம் வாழையாகவே அமைந்தது. இங்கு, வாழைக்குத் தாலி கட்டி, பரிகாரம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்!

இங்கே அற்புதமாக கோயில் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்யாண வரம், நீண்ட ஆயுள் ஆகியவற்றை வழங்கி, எம பயத்தையும் போக்கி அருள்கிறார் ஸ்ரீஞீலிவனநாதர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீநீள்நெடுங்கண்ணி. அதாவது ஸ்ரீவிசாலாட்சி அன்னை!

மிக நீண்டதான மதிலும் மொட்டை கோபுரமும் விஸ்தாரமான நடைபாதையும் கொண்டு, வெகு அழகாகவும் ரம்மியமாகவும் திகழும் ஆலயத்துக்குள் நுழையும் போதே, மனம் லேசாகிவிடும். உள் பிராகாரமும் வெளிப் பிராகாரமும் கொண்டு, நந்தவனத்துடன் கூடிய ஏகாந்தம், நம்மையும் நம் குழப்பமான மனத்தையும் அமைதிப்படுத்தும்; ஆற்றுப்படுத்தும். கருங்கல் திருப்பணியால் செய்யப்பட்ட ஆலயமும் சிற்பங்களும் கண்ணைக் கவரும்.

கல்யாணத் தடை, ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் சரியில்லை, களத்திர தோஷம் என்று எதுவாக இருந்தாலும் சரி... ஒரே ஒரு முறை, திருப்பைஞ்ஞீலி தலத்துக்கு வந்து, பரிகாரங்களைச் செய்து சிவனாரை வேண்டிச் சென்றால் போதும்... விரைவில் கல்யாண வரம் வந்துசேரும். வீட்டில் கெட்டிமேளம் கேட்கும் என்பது என்பது உறுதி! அதனால்தான் இந்தத் தலத்தில் வருடம் 365 நாளும் திருமண பரிகாரம் நடந்துகொண்டிருக்கிறது.

இங்கே உள்ள கல்வாழைக்கு, தாலி கட்டி செய்யப்படும் சடங்கு சாங்கியப் பரிகாரங்களைச் செய்து, சிவ பார்வதியை மனதார வேண்டிக் கொண்டால் போதும், மங்கலத் திருமணம் மனதுக்கு விருப்பப்படியே நடந்தேறும்!

மகாவிஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயுபகவான், அக்னி பகவான், சூதமாமுனிவர் முதலானோர் இங்கு தவமிருந்து, சிவனாரை வணங்கி, சிவனருள் பெற்றதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்! திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பெருமான் என மூவராலும் தேவாரம் பாடப்பட்ட அற்புதமான தலம்.

எல்லா ஆலயங்களிலும் நவக்கிரக சந்நிதி உண்டு. இங்கே, நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒன்பது குழிகளாக அமைந்து உள்ளன. அதேபோல், நம்முடைய ஆயுளுக்கு காரண காரியக்காரராகத் திகழும் எமதருமனுக்கே உயிர் தந்து சிவபெருமான் அருளிய தலம் இது! ஆகவே இங்கே எமனுக்கு சந்நிதி உள்ளது. நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தாலோ, தீராத வியாதியால் அவதிப்பட்டாலோ இந்தத் தலத்தில் ம்ருத்யுஞ்சய ஹோமம் செய்து வழிபட்டால், ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழலாம்.

அதேபோல், சஷ்டியப்த பூர்த்தி எனப்படும் அறுபதாம் கல்யாணம், சதாபிஷேகம் என்று சொல்லப்படும் எண்பதாம் கல்யாணம் முதலான வைபவங்களை, இங்கு வந்து நடத்தினால், இன்னும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்வார்கள். அவர்கள் சந்ததியும் சிறந்து விளங்கும்!

SCROLL FOR NEXT