ஆன்மிகம்

திருப்பரங்குன்றம், பழநி, திருத்தணி உள்ளிட்ட முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை - பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு

செய்திப்பிரிவு

மதுரை/ திருத்தணி: ஆடிக் கிருத்திகையையொட்டி திருப்பரங்குன்றம், பழநி, திருத்தணி உள்ளிட்ட அறுபடைவீடுகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கோயிலிலிருந்து புறப்பாடாகி கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை அருள்பாலித்தனர். இரவு 7 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் பல்வேறு காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதேபோல், அழகர்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

பழநியில் கொண்டாட்டம்: ஆடி கிருத்திகையையொட்டி பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்த பக்தர்கள் காவடி எடுத்தும், படிப்பாதையில் சூடம் ஏற்றி படி பூஜை செய்தும் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினர். மலைக்கோயில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 2 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்றிரவு 7.30 மணி அளவில் தங்கரதப் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. இக்கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா கடந்த 7-ம் தேதி ஆடி அஸ்வினி விழாவோடு தொடங்கியது.

நாளை வரை நடைபெற உள்ள இவ்விழாவின் முக்கிய திருவிழாவான ஆடி கிருத்திகை திரு விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில்,மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தங்கவேல், தங்க கீரிடம், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தமிழகம் மட்டுமல்லாமல், பிறமாநிலங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள், பன்னீர் காவடி, புஷ்ப காவடி உள்ளிட்ட பல வகையான காவடிகளை சுமந்தும், மொட்டையடித்தும் தங்களின் நேர்த் திக்கடனை செலுத்தினர். அவர்கள், பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, இரவு சரவணப் பொய்கையில் 3 நாள் தெப்பத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதில், உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன், வண்ண மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, 3 முறை குளத்தைச் சுற்றி வலம் வந்து அருள் பாலித்தார்.

SCROLL FOR NEXT