ஆன்மிகம்

மகாதேவாஷ்டமியில் பைரவ வழிபாடு! கடன் தொல்லை தீரும்; எம பயம் விலகும்!

செய்திப்பிரிவு

'அஷ்டமியா இருக்கு. இன்னிக்கி எந்த வேலையும் செய்ய வேணாமே’ என்று சொல்லக் கேட்டிருப்போம். ஏன்... நாமே கூட சொல்லியிருப்போம். ஆனால் அஷ்டமி நன்னாளில், முக்கியமான ஒன்றைச் செய்தால், இன்னும் இன்னுமான பலன்களையும் பலத்தையும் பெறலாம். அது... பைரவர் வழிபாடு!

கலியுகத்துக்கு காலபைரவர் என்பது முதுமொழி. தேய்பிறை அஷ்டமியாகட்டும் வளர்பிறை அஷ்டமியாகட்டும்... அது அவருக்கான நாள். பைரவ மூர்த்திக்கான நன்னாள். எனவே இந்த நாளில், கலியுகத்தின் தெய்வமான பைரவரை வணங்கி வழிபடச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். எம பயம் இருக்காது. திருமணத் தடை அகலும். பைரவர் சனிபகவானுக்கே ஆசானாக, குருநாதராகப் போற்றப்படுகிறார் என்கிறது புராணம். அதனால், சனி பகவானின் இன்னல்களில் இருந்து நாம் விடுபட வேண்டுமெனில், பைரவரை வணங்கி தப்பித்துக் கொள்ளலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவ பகவானை வழிபடுகிறார்களோ... அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்!

மாதந்தோறும் அஷ்டமி வரும். பைரவருக்கு விசேஷம்தான். ஆனாலும் கார்த்திகை மாத அஷ்டமி ரொம்பவே சிறப்பு. இதை மகாதேவாஷ்டமி என்பார்கள். பைரவாஷ்டமி, வைக்கத்து அஷ்டமி என்றெல்லாம் போற்றுகிறார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

இந்த முறை ஐப்பசியிலேயே வருகிறது மகாதேவாஷ்டமி. அதிலும் சனிக்கிழமையன்று வருவது இன்னும் சக்தி வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. இதோ... நாளை நவம்பர் 11-ம் தேதியான சனிக்கிழமை, மகாதேவாஷ்டமி.

நாளை சனிக்கிழமை நாளில்... காலையிலும் மாலையிலும் சிறப்பு வழிபாடுகள் பைரவருக்கு நடைபெறும். சில ஆலயங்களில், காலை 7 மணிக்கெல்லாம் பூஜைகள் நடைபெறும். திருச்சி திருப்பட்டூர் பிரம்மா கோயிலில் உள்ள பைரவருக்கு நாளைய தினம் காலை 9 முதல் 10.30 மணிக்குள் ராகுகால வேளையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

மாலையில் அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு வடைமாலை சார்த்தி வணங்குவார்கள் பக்தர்கள். மிளகு வடை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். செந்நிற மலர்கள், அரளி மாலை கொண்டு பைரவருக்கு அணிவித்து பிரார்த்தனை செய்யுங்கள். வெண் பொங்கல் நைவேத்தியம் வழங்கி, பைரவ வழிபாடு செய்தால், கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்ப்புகள் அகலும். தீய சக்திகள் அண்டாது என்கிறார் திருப்பட்டூர் பாஸ்கர குருக்கள்.

எம பயம் போக்கும் பைரவ பெருமானை மகாதேவாஷ்டமியில் வணங்குவோம். மகத்தான வாழ்வைப் பெறுவோம்!

          
SCROLL FOR NEXT