# பக்தி வேறு, கர்மம் வேறு அல்ல; கர்மம் வேறு, ஞானம் வேறு அல்ல. அனைத்தும் ஒரே குறிக்கோளான இறைவனை அடைவதற்கான வழிகளே ஆகும். அவரவர் தன்மைக்கு ஏற்ப எந்த வழியைப் பின்பற்றினாலும் இறுதியில் அடைய வேண்டிய லட்சியம் எல்லோருக்கும் ஒன்றுதான்.
# வாழ்வில் நாம் படும் துன்பங் களுக்கும், இன்னல் களுக்கும் அடிப்படைக் காரணம் நான் வேறு, நீ வேறு என்ற இரட்டை மனோபாவம்தான். மனதில் சுயநலம் இருக்கும் வரை துன்பத்திலிருந்து விலக முடியாது. சுயநலம் உள்ள இடத்தில் என்றும் அமைதி இருப்பதில்லை.
# குரு ஒருவரைத் தேடு. அவரது திருவடித் தாமரைகளில் திடமான பக்தி கொண்டவனாகிப் பிறவித் துன்பத்திலிருந்து விரைவில் விடுபடு. குருவருளில் நம்பிக்கை கொண்டு மனதை அடக்கப் பழகினால், உள்ளத்தில் உறைந்திருக்கும் தெய்வத்தைக் காணலாம்.
# செல்வத்தாலும், சுற்றத்தாலும், இளமையாலும் யாரும் கர்வம் கொள்ளாதீர்கள். என்றைக்காவது ஒருநாள் இவையெல்லாம் நம்மை விட்டு விலகிச் சென்றுவிடும். அதனால், வாழ்நாளுக்குள் கடவுளை அறிய முற்படுங்கள்.
# குழந்தைகள் விளையாடிக் களிக்கிறார்கள். வாலிபர்கள் பெண்ணின்பத்தை நாடுகிறார்கள். வயோதிகர்கள் கவலையில் கழிக் கிறார்கள். ஆனால், கடவுளின் மீது பற்றுவைக்க மறந்துவிடுகிறார்கள்.
# நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும்கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.
# அனைத்து சாஸ்திரங்களும், வேத நூல்களும் மனதை அடக்கும் வழிமுறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் தீயை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.
# உடலுக்குக் கிடைக்கும் இன்பத்தை எவ்வளவுதான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் அந்த ஆசையை விட்டுவிட இடம் தருவதில்லை.
# காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்தை அடையும். அதுபோல் மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக்கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.
# பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல் நீர் அருகில் சென்றதும் மறைவதுபோல, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.
# சிரத்தையும், பக்தியும், தியான யோகமும் முக்திக்குக் காரணங்கள் என வேதம் கூறுகிறது. யார் இவைகளில் நிலைபெற்றிருக்கிறாரோ அவர் உலகத் தளைகளில் இருந்து விடுதலை பெறுகிறார்.
# உலகில் எங்கும் என்னைப் போல் பாவம் செய்தவரும் இல்லை. உன்னைப் போல் பாவத்தைப் போக்கும் சக்தி கொண்டவளும் இல்லை. தேவி! இந்த உண்மையை எண்ணிப் பார்த்து உன் இஷ்டம் போல செய்வாயாக.
# மனிதப் பிறவி, ஞானத்தில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை மூன்றும் கிடைப்பது அரிது. தெய்வத்தின் அருள் காரணமாகவே இவை ஒருவனுக்கு கிடைக்கின்றன.