ஆன்மிகம்

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 07: சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே

கரு.ஆறுமுகத்தமிழன்

‘எ

து நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்று தொடங்குகிற கீதா சாரத்தின் சொற்றொடர்களைப் பலரும் மனப்பாடமாக அறிவார்கள். அதில் ஒரு வரி, ‘எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு’ என்பது. படித்து அறிந்த அந்த வரியைப் பகுத்து அறியவில்லை என்பதன் விளைவுதான் இன்னும் தொடர்கிற இழப்பு அச்சம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

எது எதற்குத் துணை பெறுவது என்ற கேள்வியையே ஒதுக்கிவிடுவோம். ‘மைத்துனன் துணை உண்டானால் மலை ஏறிக்கூடப் பிழைக்கலாம்’ என்று ஒரு சொலவடை உண்டல்லவா? அறிந்த களமோ அறியாத களமோ யாரேனும் ஒருவரைத் துணையாகப் பெறுவது நல்லது; பாதுகாப்பானது. ஆகவே, துணை பெற வேண்டும். சரி. யாரைத் துணையாகப் பெறுவது? நாம் இறங்கப்போகும் களத்தில் நம்மைவிடத் தெளிவான அறிவும் தேர்ச்சியும் பெற்ற ஒருவரைத்தானே துணையாகப் பெற வேண்டும்? அதுதானே பயன்தரும்?

நமக்குப் பார்வையில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். நாமோ ஓரிடத்திலிருந்து புதிதாக மற்றோர் இடத்துக்குப் போகவேண்டியிருக்கிறது. என்ன செய்யலாம்? யாரேனும் ஒருவரைத் துணையாகக் கொண்டு, அவருடைய வழிகாட்டுதலில் போகலாம். ஆனால், வழிகாட்டுவதற்காகத் துணை வருகிறவர் பார்வை உடையவராகவும் வழி தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

வழிகாட்டுவதற்காக நாம் தேர்வு செய்துகொண்டவரும் நம்மைப் போலவே பார்வையற்றவராக, வழி தெரியாதவராக இருந்தார் என்றால், நாம் போக வேண்டிய புதிய இடத்துக்குப் போய்ச்சேர முடியுமா? போகிற வழியில் ஏதேனும் ஒரு குழியில் தடுமாறித் தலைகுப்புற உருள வேண்டியதுதான். எனவே, சரியான வழிகாட்டியைத் தேர்வு செய்வதென்பது மிகவும் இன்றியமையாதது—உலகியல் பாதையில் வழிகாட்டுவதற்கு மட்டுமன்று, உயிரியல் பாதையில் வழிகாட்டுவதற்கும். திருமூலர் சொல்கிறார்:

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்;

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்;

குருடும் குருடும் குருட்டுஆட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழிவீழு மாறே

(திருமந்.1680)

குரு என்பது தொல்காப்பியர் காலந்தொட்டு வழக்கில் இருந்துவரும் நற்றமிழ்ச் சொல். குரு என்றால் ஒளி; செம்மை; முளைப்பு. வெள்ளை வெளேரென்ற நிறமுடைய பறவையாகிய நாரையைக் ‘குருகு’ என்று சொல்வது அதன் ஒளிர் வெண்மையை வைத்துத்தான். இரத்தத்தைக் ‘குருதி’ என்று சொல்வது அதன் செம்மையை வைத்துத்தான். வாழையின் அடியில் கிளைத்துவரும் இளங்கன்றைக் ‘குருத்து’ என்று சொல்வது அதன் முளைப்பை வைத்துத்தான். எது ஒளியுடையதோ எது செம்மையுடையதோ எது முளைத்துப் பெருகக்கூடியதோ அது குரு. அந்த அடிப்படையில் ஒளியையும் செம்மையையும் முளைப்பையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று தன்னிலிருந்து பிறருக்குக் கடத்துகிற ஆசிரியர் ‘குரு’ ஆகிறார்.

ஒள்ளிய மலர்களுடன் செழிப்பாக வளர்ந்திருக்கும் மரம் குருந்த மரம். அதன் கீழ் இருந்து தனக்கு அறிவு விளக்கம் செய்த குருவைப் பாடுகிறார் மாணிக்கவாசகர்:

சோதியே, சுடரே, சூழ்ஒளி விளக்கே...

நீதியே, செல்வத் திருப்பெருந்துறையில்

நிறைமலர்க் குருந்தம் மேவியசீர்

ஆதியே... (திருவாசகம், அருட்பத்து, 1)

நல்லது. குரு என்பவர் ஒளி ஊட்டுகிறவர், செம்மைப்படுத்துகிறவர், முளைக்கச் செய்கிறவர். குருடு என்பவரோ ஒளி வேண்டுகிறவர்; செம்மை வேண்டுகிறவர்; முளைத்துப் பெருக வேண்டுகிறவர். இந்த வேண்டுதல்கள் நிறைவேறச் சரியான குருவைத் தேர்ந்துகொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லையா?

காசு கொடு, கடவுளைக் காட்டுகிறேன் என்று பேசுகிற குரு, ஒளி உடைய உண்மைக் குருவா? ஆசிரமத்துக்கு வா, அமைதி பெறுவாய் என்று திருவாய்மொழிகிற குரு செம்மைக் குருவா? கடவுளைத் தேடிக் கண்டடைந்தவர் நம்மிடம் காசு கேட்பாரா? நோகாமல் நோன்பிருக்க ஆசிரமம் அமைப்பாரா? இத்தகைய குருக்கள் பின்னால் போனால் நாம் ஒளி பெறுவோமா அன்றித் திருமூலர் சொன்னதுபோலக் குழி பெறுவோமா?

உயிர் இருந்தது எவ்விடம் உடம்பு எடுப்பதன்முனம்?

உயிர் அதாவது ஏதடா? உடம்பு அதாவது ஏதடா?

உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதுடா?

உயிரினால் உடம்பு எடுத்த உண்மைஞானி சொல்லடா! (சிவவாக்கியர் பாடல்)

உடம்புக்குள் வருவதற்கு முன்னால் உயிர் எங்கே இருந்தது? உயிர் என்றால் என்ன? உடம்பு என்றால் என்ன? உயிர் ஏன் உடம்புக்குள் வந்தது? உயிரை உடம்புக்குள் இட்டது எது என்று சிவவாக்கியர் கேட்கிற கேள்விகள் நமக்கும் இருக்கின்றன. ஆசிரமத்துக்கு வா, நன்கொடை அளி, என் விடை கிடைக்கும் என்று கணக்கிட்டுப் பேசாமல் நேரடியாக விடை சொல்லி வழிநடத்துகிறவர்தான் உண்மைஞானி.

அழகாக இருக்கிறவரையும் அலங்காரமாகப் பேசுகிறவரையும் அமைதியான சூழலில் ஆசிரமம் வைத்திருப்பவரையும் குருவாகக் கொண்டுவிட முடியாது. ஏனென்றால், குருவிடம் நாம் எதிர்பார்ப்பது அழகையும் அலங்காரப் பேச்சையும் ஆசிரமத்தையும் அல்லவே, அறிவையே அல்லவா!

குருவுக்குத் தேர்வு வையுங்கள்; தேங்காயை முற்றிய தேங்காய்தானா என்று சுண்டிப் பார்த்து வாங்குவதைப் போலக் குருவையும் முற்றிய குருதானா என்று சுண்டிப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள் என்கிறார் விவேகானந்தர்.

ஒளி உடையவர்களைத் தேர்ந்தெடுங்கள். வாக்குக் கேட்டு வருகிறவரைத் தேர்ந்தெடுப்பதுபோலக் கண்டவர்களைத் தேர்ந்தெடுத்துவிட வேண்டாம் என்கிறார் திருமூலர்.

(ஒளி தேடுவோம்)
கட்டுரையாளர்,தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

SCROLL FOR NEXT