தூத்துக்குடி: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழாவில் நேற்று அன்னையின் தங்கத் தேர் பவனி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 441-வது ஆண்டு பெருவிழா கடந்த ஜூலை 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டை முன்னிட்டு, இந்த ஆண்டு விழாவானது தங்கத் தேர் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அன்னையின் தங்கத் தேர் பவனி நேற்று நடைபெற்றது. கடந்த காலங்களில் ஏற்கெனவே 15 முறை தங்கத் தேர் பவனி நடைபெற்றுள்ள நிலையில், 16-வது முறையாக தங்கத் தேர் பவனி நேற்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு ஜெபமாலையும், 4.30 மணிக்கு முதல் திருப்பலியும் நடைபெற்றது. காலை 5.15 மணிக்கு தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் தலைமையில் ஆயர்கள், அருட்தந்தையர்கள் இணைந்து நிறைவேற்றிய பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. காலை 7 மணிக்கு கோவா உயர்மறை மாவட்ட பேராயர் கர்தினால் பிலிப் நேரி தலைமையில் தங்கத் தேர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
காலை 8 மணிக்கு தூய பனிமய அன்னை எழுந்தருளிய தங்கத் தேரை கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ், இலங்கை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பர்னாண்டோ ஆகியோர் அர்ச்சித்து வைத்தனர். காலை 8.10 மணிக்கு அன்னையின் தங்கத் தேர் தூத்துக்குடி மாநகர வீதிகளில் வலம் வரத் தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 'மரியே வாழ்க' கோஷம் விண்ணை பிளந்தது. ஏராளமானோர் அன்னையின் தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பகல் 12 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.
தொடர்ந்து தங்கத் தேர் நன்றி திருப்பலி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தங்கத் தேர் நன்றி விழாவும், இரவு 7 மணிக்கு புனித பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்பு கொடுக்கும் நிகழ்வும், நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை குமார்ராஜா, உதவி பங்குத்தந்தை சைமன் ஆல்டஸ், பக்த சபையினர் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.