ஆன்மிகம்

கைசிக ஏகாதசியின் மகிமை

உ.வே.ஸ்ரீமான் கோதண்டராமன்

வை

ணவக் கோயில்களில் கொண்டாடப்படும் ஏகாதசிகள் இரண்டு. ஒன்று வைகுண்ட ஏகாதசி. இது எல்லோரும் அறிந்ததே! மற்றொன்று கைசிக ஏகாதசி ! இது கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியாகும். இவ்வாண்டு நவம்பர் 30 (வியாழக்கிழமை), அதாவது இன்று நிகழ்கிறது ! வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியைப் போல் இந்தக் கைசிக ஏகாதசியில் என்ன விசேஷம் ? அதைப் பற்றிய ஒரு கதை வராக புராணத்தில் உள்ளது !

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள ஒரு சிற்றூர் திருக்குறுங்குடி. இவ்வூரின் எல்லைக்கு அப்பால் காட்டுப்புறத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பாணன் நம்பாடுவான், திருக்குறுங்குடியில் கோயில் கொண்டுள்ள வைணவ நம்பி என்ற திருநாமம் கொண்ட திருமாலைப் பாடித் துதிக்கும் பக்தனாக விளங்கினான்.

கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியன்று விரதமிருந்து இரவு உறங்காதிருக்கும் ஜாக்ர விரதத்தை அனுஷ்டித்து ஆலயத்துக்குப் புறப்பட்டபோது, பிரம்மராட்சதன் ஒருவனிடம் மாட்டிக்கொண்டு, தன் பக்தியாலும் தான் பாடிய கைசிகப் பண்ணாலும் அந்த ராட்சதனுக்கே சாபவிமோசனம் அருளி பெருமாளின் விஸ்வரூப தரிசனத்தையும் பெற்றவர் நம்பாடுவான்.

ஸ்ரீ வராஹப் பெருமான், பூமிதேவியின் ஒரு கேள்விக்கு விடையாக நம்பாடுவான் வரலாற்றைச் சொல்லி, யார் கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி விரதமிருந்து கைசிகப் பண்ணிசைத்து பாடுகிறாரோ இக்கதையைக் கேட்கிறாரோ அவர் செய்த பாவங்கள் நீங்கி இன்புற்று வாழ்வார் என்றும் அருளினார்.

மேற்கண்ட நம்பாடுவானின் இக்கதை பெருமாள் கோயில்களில் கைசிக புராணம் என்ற பெயரில் கார்த்திகை மாதத்து வளர்பிறை துவாதசியன்று வாசிக்கப்படுகிறது. அப்போது பெருமாளுக்குச் சில கோயில்களில் பட்டுப் போர்வை சாத்தும் நிகழ்ச்சியும் காணப்படுகிறது.

நாம் கைசிகப் பண் பாடாவிட்டாலும் இக்கதையைக் கேட்டாலோ படித்தாலோ, ஸ்ரீவராஹ சரம ஸ்லோகத்தைத் தினமும் உச்சரித்தாலோ மேற்சொல்லப்பட்ட பாவங்களிலிருந்து தப்பிக்க வழியுண்டு.

SCROLL FOR NEXT