மதுரை: உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேருக்கு இன்று நடந்த தலையலங்கார நிகழ்ச்சியின்போது கிரேன் மூலம் 4 அடி உயர தங்கக் கலசம் பொருத்தப்பட்டது.
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா ஜூலை 24-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அன்ன வாகனம், சிம்மம், அனுமார், கருடன், சேஷ வாகனம், யானை, புஷ்பச்சப்பரம், குதிரை வாகனங்களில் எழுந்தருள்கிறார். முக்கிய விழாவான தேரோட்டம் ஆடி பவுர்ணமியான ஆகஸ்ட் 1-ல் நடைபெறுகிறது. அன்று காலை 6.30 மணியளவில் தேருக்கு சுவாமி எழுந்தருள்கிறார்.
பின்னர் காலை 8 மணிக்குமேல் 8.35-க்குள் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறும். தேரோட்டத்தை முன்னிட்டு 60 அடி உயரத் தேருக்கு புதிய வண்ண அலங்கார திரைச்சீலை, தேர் சக்கரங்கள், தேரின்முன்புள்ள குதிரைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி முடிந்தது.
மேலும், தேருக்கு முட்டுக்கொடுக்கும் கட்டைகள், பிரேக் புதுப்பிக்கும் பணி, தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இந்நிலையில், தேருக்கு தலையலங்காரம் நிகழ்ச்சி சிறப்பு பூஜைகளுடன் இன்று நடைபெற்றது. இதில் 60 அடி உயர தேரின் உச்சியில் 4 அடி உயர தங்கக்கலசம் கிரேன் மூலம் பொருத்தப்பட்டது. கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகின்றன.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3-ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.