கும்பகோணம்: கும்பகோணம் மகாமகக் குளத்திலிருந்து அயோத்தியிலுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக 21 வகையான புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
அயோத்தியிலுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி மகர சங்கராந்தி தினத்தன்று நடைபெறுவதாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, அந்த கும்பாபிஷேகத்திற்காகக் கங்கை, யமுனை, பிரம்பரபுத்ரா, காவிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள 21 நதியிலிருந்து புனித நீர் 3 கடங்களில் சேகரிக்கப்பட்டு, அந்தக் கடங்கள் புறப்பாடு கும்பகோணம் காசிவிஸ்வநாதர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, மகாமக குளத்திலிருந்து புறப்பாடு நடைபெற்றது.
சூரியனார் கோயில் வாமதேவ சந்தானம் சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் மாநகராட்சி மேயர் க.சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கடங்கள் புறப்பாட்டினை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிவசேனா கட்சி தஞ்சாவூர் கோட்ட தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். அகில பாரத இந்து ஆன்மிக பேரவையின் மாநில பொதுச் செயலாளர் இரா.கண்ணன், அனுமன் சேனா நகரத் தலைவர் பிரபாகரன், ஒன்றிய தலைவர் அருணகிரி மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
புனித நீர் யாத்திரை குழுவின் தலைவர் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவின் மாநில பொதுச் செயலாளர் கா.பாலா கூறும்போது, “21 நதிகளிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு காசி விஸ்வநாதர் கோயிலில் பிரார்த்தனை செய்து, மகாமகக் குளத்தில் பூஜை செய்து புறப்பாட்டினை தொடங்கியுள்ளோம். இக்கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஏராளமானவர்களை இந்த மாவட்டத்திலிருந்து அழைத்துச் செல்வதற்குத் திட்டமிட்டு, அதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளோம்.
இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் சென்று புனித நீர் கடத்துக்குப் பூஜை அக்கோயிலில் பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து ரயில் மூலம் அயோத்திக்கு சென்று, ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.