திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமி நாளில் கட்டணம் இல்லாமல் சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி முன்னேற்பாடு பணி குறித்த ஆய்வு கூட்டம் அண்ணாமலையார் கோயிலில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, “திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆடி மாத பவுர்ணமி நாளான வரும் ஆகஸ்ட் 1 மற்றும் 2-ம் தேதிகளில் பக்தர்களின் வருகை கூடுதலாக இருக்கும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் செய்து கொடுக்க வேண்டும். சிறப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பேருந்துகளையும் கூடுதலாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அண்ணாமலையார் கோயில் நடை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு சாத்தப்படும். பவுர்ணமி நாளில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கட்டணம் இல்லாமல் சுவாமியை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'ஆன்லைன்' மூலமாக பதிவு செய்தவர் களுக்கு மட்டும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படும்” என்றார்.
இதில், மாவட்ட காவல் கண் காணிப்பாளர்கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரிய தர்ஷினி, இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஜோதி, அண்ணாமலை யார் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.