ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா நேற்று (ஜூலை 25) இரவு புஷ்ப யாகத்துடன் நிறைவு பெற்றது. ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு 108 வகையான மலர்களால் புஷ்பயாகம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் அவதார விழாவான அடிப்பூர திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் 5-ம் நாளில் பெரியாழ்வார் மங்களாசாசனம், 5 கருட சேவை வைபவமும், 7-ம் நாள் விழாவில் சயன சேவையும், 8-ம் நாளில் பூப்பல்லக்கு உள்ளிட்ட உற்சவங்கள் சிறப்பாக நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருஆடிப்பூர தேரோட்டம் சனிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கொடியேற்றம் அன்று சந்நிதியில் இருந்து புறப்பாடான ஆண்டாள் ரெங்கமன்னார் 10 நாட்களும் கண்ணாடி மாளிகையில் வீற்றிருந்தனர். 11-ம் நாளான நேற்றுமுன்தினம் தீர்த்தவாரி உற்சவம் முடிந்த நிலையில் ஆண்டாள் ரெங்கமன்னார் மூலஸ்தானம் எழுந்தருளினர். 12-ம் நாளான நேற்று இரவு ஆண்டாள் சந்நிதியில் உள்ள வெள்ளிகிழமை குறடு மண்டபத்தில் புஷ்பயாகம் நடைபெற்றது.
இதற்காக 108 வகையான மலர்கள் அத்தப் பூ கோலம் போல் விரித்து வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து 108 மலர்களால் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு புஷ்பயாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.