மதுரை: மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நேற்று ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவியருடன் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இரவில் அன்ன வாகனத்தில் தேவியருடன் சுவாமி எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து, தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். சிம்மம், அனுமார், சேஷம், யானை உள்ளிட்ட வாகனங்கள், புஷ்பச் சப்பரம், குதிரை வாகனங்களில் சுவாமி எழுந்தருளுவார்.
கருப்பணசாமி கோயில்: ஜூலை 28-ம் தேதி காலை 7 மணியளவில் சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டபத்துக்கு பெருமாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருள்வார். முக்கிய விழாவான தேரோட்டத்தையொட்டி ஆடி பவுர்ணமியான ஆக.1 காலை 6.30 மணியளவில் தேருக்கு சுவாமி எழுந்தருள்கிறார். பின்னர் காலை 8 மணிக்குமேல் 8.35 மணிக்குள் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். அன்று மாலை 18-ம் படி கருப்பணசாமி கோயில் கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை, தீபாராதனை, சந்தனம் சாத்துதல் நடைபெறும்.
ஆக.3-ல் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறும். ஆக.16 ஆடி அமாவாசையன்று இரவு 7 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.