குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயிலில் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் பலகைகளால் அமைக்கப்படும் உயர்மேடை. படம்: என்.கணேஷ்ராஜ். 
ஆன்மிகம்

ஆடித் திருவிழா | குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் நாளை கொடியேற்றம்

என்.கணேஷ்ராஜ்

சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடித் திருவிழாவுக்காக நாளை கொடியேற்ற வைபவம் நடைபெற உள்ளது.

தேனி மாவட்டம் குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. சுயம்புவாய் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஒரே ஸ்தலம் என்பதால் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயில் திருவிழா ஒவ்வொரு ஆடி சனிக்கிழமைகளில் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

இதன்படி ஆடி முதல் சனிக்கிழமையான நாளை (ஜூலை 22) திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொடியேற்ற வைபவம் நடைபெற உள்ளது. இதற்காக காலை 11 மணிக்கு கோயிலில் கலிப்பனம் கழித்து, சுத்தநீர் தெளிக்கப்பட உள்ளது. பின்பு 11.30மணிக்கு காகம் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்படுகிறது.

திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி செல்வதற்காக தடுப்புகளால் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பகவானை எளிதில் தரிசிக்கும் வகையில் பலகைகளால் உயர்மேடையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குச்சனூரின் இரண்டு பகுதிகளில் தற்காலிக பேருந்துநிலையம் அமைக்கப்பட்டு, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் பிரசித்தி பெற்ற ஸ்தலம் என்பதால் இத்திருவிழாவால் தேனி மாவட்டம் களைகட்டியுள்ளது.

விழாவின் உச்ச நிகழ்வாக ஆக.4-ம் தேதி திருக்கல்யாணம், 7-ம் தேதி முளைப்பாரி, கரகம் கலக்குதல், மஞசள் நீராட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள்நடைபெறுகிறது. ஆக.19-ம் தேதி இரவு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT