மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூரில் திருமுறைகளை யானை மீது வைத்து வீதியுலா நடைபெற்றது.
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழா நேற்று முன்தினம் காலை தொடங்கியது. இதையொட்டி, கிராமிய கலைஞர்கள் பங்கேற்ற ஊர்வலம் மற்றும் கருத்தரங்கம், கவியரங்கம், பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சதய விழாவின் நிறைவு நாளான நேற்று காலை பெரிய கோயில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. பின்னர், திருமுறை நூல்கள், அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து 100-க்கும் அதிகமான ஓதுவாமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து, தமிழக அரசு சார்பில், கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு தஞ்சாவூர் எம்எல்ஏ ஆர்.விஜய் சரவணன், ஆட்சியர் ஆர்.ரேவதி, மேயர் (பொறுப்பு) அஞ்சுகம் பூபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சதய விழா குழுத் தலைவர் என்.எஸ்.சரவணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகள், அமைப்புகள், தமிழ் அமைப்புகள் உட்பட மொத்தம் 138 அமைப்புகள் சார்பில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சுவாமி, அம்மன் ஆகியோருக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.