பழநி: பழநியில் கொழுமம் சாலையில் பாப்பம்பட்டியில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது பஞ்ச பாண்டவர்கள் மலை, அயிரை மலை என்று அழைக்கப்படும் ‘ஐவர் மலை’.
இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து 1,400 அடி உயரத்தில் வடக்கு தெற்காக அமைந்துள்ளது. தெற்கு திசையில் இயற்கையாக 140 நீளம், 15 அடி உயரத்தில் குகை அமைந்துள்ளது. தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இம்மலைக்கு செல்ல படிகள் உள்ளன.
பஞ்சபாண்டவர்கள் வனவாசம்:
மகாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் துரியோதனனிடம் நாட்டை இழந்த பஞ்ச பாண்டவர்கள், வனவாசத்தின்போது திரவுபதியுடன் இந்த மலையில் தங்கியிருந்ததாக நம்பிக்கை. இந்த மலையின் தென்புறத்தில் அமைந்துள்ள மலை ‘துரியோதனன் மலை’ என்று அழைக்கப்படுகிறது. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த போகர் சித்தருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருந்தது. இந்த தோஷம் நீங்க ஐவர் மலையில் வேள்வி நடத்தினார்.
அப்போது, புவனேஸ்வரி அம்மன் தோன்றி, இந்த தோஷம் போக நவபாஷாணத்தால் முருகன் சிலை செய்து பழநியில் வைத்து வழிபட வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே, பழநி மலைக்கோயிலில் உள்ள நவபாஷாண சிலையை இந்த மலையில் தங்கியிருந்து போகர் உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஐவர் மலை பழநிக்கு ‘தாய் வீடு’ என்றும் கூறப்படுகிறது.
வற்றாத சுனைகள்: ஐவர் மலையில் வற்றாத இரண்டு புஷ்கரணிகள் (சுனைகள்) உள்ளன. ஒன்று தாமரை மலர்களுடன் சூரிய புஷ்கரணி என்றும், மற்றொன்று அல்லி மலர்களுடன் சந்திர புஷ்கரணி என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படியான அமைப்பு இந்த புஷ்கரணிகளின் தனிச்சிறப்பு.
மலைக்கோயில்கள்: 150 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து நாராயண பரதேசி என்பவர், இந்த மலைக்கு வந்து தங்கியுள்ளார். பஞ்ச பாண்டவர்கள் தங்கி இருந்ததை அறிந்து, இங்கு திரவுபதி அம்மனுக்கு கோயிலை உருவாக்கி வணங்கியுள்ளார். காலப்போக்கில் அவர் அங்கேயே முக்தி அடைந்தார். அவரது சீடர் பெரியசாமி, இம்மலையில் பலருக்கு தியானம், யோகா போன்றவற்றை கற்பித்து பின்பு இங்கேயே முக்தி அடைந்தார்.
தற்போது உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் களில் இருந்தும் பலர் இங்கு வந்து யோகா, தியான பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த மலையில் குழந்தை வேலப்பருக்கு கோயில் உள்ளது. பழநி மலையை போல் இங்கும் இடும்பனுக்கு தனிக் கோயில் உள்ளது. மலை அடிவாரத்தில் பாத விநாயகர் மற்றும் மலை உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளது.
16 சமண முனிவர்கள்: இங்குள்ள தூபத்தில் ஆடி அமாவாசை அன்று ஏற்றப்படும் தீபம் காற்று பலமாக வீசினாலும் அணையாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. இம்மலையில் வள்ளலார் சன்மார்க்க சங்க மடமும் உள்ளது. கூன் பாண்டியன் காலத்தில் விரட்டியடிக்கப்பட்ட சமண முனிவர்கள் தப்பித்து, இங்கு வந்து தங்கி வாழ்ந்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய கல் படுக்கைகள் இங்கு உள்ளன. இதற்குச் சான்றாக திரவுபதி அம்மன் கோயிலின் வெளிப்புறத்தில் மேல் பகுதியில் 16 சமண முனிவர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிலைகளின் கீழ் இச்சிலை செய்து வைத்துள்ளவர்களின் பெயர்கள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. 16 சமண முனிவர்களும் ‘அயிரை மலைத் தேவர்’ என்று அழைக்கப்பட்டனர்.
ஒரே இடத்தில் பஞ்சபூதங்கள்: ஒரே இடத்தில் பஞ்சபூதங்களை வணங்குவதற்கான இடமாக இந்த ஐவர் மலை உள்ளது. நீர் - சூரிய, சந்திர புஷ்கரணி, நிலம் - மலை (ஐவர் மலை நிலத்தில் அமைந்துள்ளது) நெருப்பு - ஆடி ஆமாவாசை தினத்தில் ஏற்றப்படும் தீபம், காற்று - இங்கு எப்படிப்பட்ட காற்றுக்கும் தீபம் அணையாது. ஆகாயம் - மலைக்கு மேல் பரந்து விரிந்துள்ள ஆகாயம் என பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயமும் இம்மலையில் உள்ளன. இங்குள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் கிருத்திகை அன்று சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது. இதேபோல் திரவுபதி அம்மன் கோயிலில் அமாவாசை அன்றும், பெரியசாமி ஜீவ சமாதியில் பவுர்ணமி நாட்களிலும் சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெறுகின்றன.
ஆன்மிகம், யோகா, தியானம் மற்றும் மன அமைதியை விரும்புபவர்களுக்கு இனிமையான மலைப் பயணமாக இந்த ஐவர் மலை இருக்கும். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வருவோர் ஒருமுறை இங்கு வந்து செல்லலாம்.