வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
வாரணம் நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்.
என்ற வாரணமாயிரம் பாடல் தொகுப்பைப் பாடினால் பிறக்கும் பிள்ளை நல்ல பிள்ளையாக இருக்கும் என்பதனை இத்தொகுப்பின் பலன் கூறும் பாடலில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள்.
ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே.
வில்லிப்புத்தூர் தோன்றிய வரலாறு சுவையானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வராக ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட இடம் காட்டையும் கொண்டிருந்தது. அக்காட்டில் வசித்த வில்லி, கண்டன் என்ற வேடுவ சகோதரர்கள் வழக்கம்போல் வேட்டையாடச் சென்றனர்.
அப்போது கண்டன் துரத்திச் சென்ற புலி அவனைக் கொன்று தின்றுவிடுகிறது. இதனை அறியாத வில்லி தன் தம்பியைத் தேடி அலைந்ததால் மிகவும் சோர்வடைந்து அக்காட்டிலேயே ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கிவிட்டான். வில்லியின் கனவில் தோன்றிய பெருமாள், அவன் தம்பி கண்டனுக்கு நேர்ந்த நிலையை விளக்குகிறார்.
அசுரன் காலநேமியை வதம் செய்ய இந்த வாரக க்ஷேத்திரத்திற்கு வந்து உதித்ததாகவும் பெருமாள் கனவில் கூறினாராம். இங்கு காட்டை அழித்து நாடாக்கிக் கோயில் கட்டினால், வடபத்திர சாயியாக இங்கே எழுந்தருளுவதாகவும் வாக்களித்தாராம் பெருமாள்.
வில்லியும் அதன்படியே செய்தாராம். யம்பதியான எம்பெருமானுக்கு, வில்லி என்ற வேடுவன் அமைத்த புதிய ஊர், அதாவது புத்தூர் என்பதால் வில்லிப்புத்தூர் என்று வழங்கப்பட்டது எனத் தல புராணம் கூறுகிறது.
இதே தலத்தில்தான் பெருமாளையே அனுதினமும் நினைத்துக்கொண்டிருந்த விஷ்ணு சித்தர் என்ற பக்தர் வாழ்ந்துவந்தார். துளசிச் செடிகளால் நிரம்பியிருந்த தோட்டத்தைப் பராமரிப்பதும், வடபத்ரசாயியைத் துளசி மாலை கொண்டு பூஜிப்பதுமே அவரது வழக்கம். அதையே தவமாகக் கருதி பக்தி சிரத்தையுடன் செய்துவந்தார்.
இவருக்கு அனுக்கிரகம் செய்யப் பெருமாள் திருவுளம் கொண்டார். பெருமாளின் வேண்டுகோளின் பேரில் பூமா தேவி, இவரது தோட்டத்தில் துளசிச் செடியொன்றின் அடியில் குழந்தையாக அவதரித்தாள். ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று இந்த அற்புதம் நடந்ததாக ஐதீகம். துளசி பறிக்கச் சென்ற விஷ்ணு சித்தர், ஒளி மயமான அன்னையைத் தூக்கி வளர்க்கும் பாக்கியத்தைப் பெற்றார்.
அந்தத் தெய்வக் குழந்தை சீரும் சிறப்புமாக வளர்ந்தது. கண்ணன் கதைகளைக் கேட்டுக் கேட்டு வளர்ந்ததால், கண்ணனையே தன் கணவனாக வரித்துக்கொண்டது. கண்ணனையே அடைய நோன்பு நோற்க முற்பட்டாள்.
தனது எண்ணங்களைப் பாசுரங்களில் தீர்மானமாகக் குறிப்பிடுபவள் ஆண்டாள். எனவே அவள் கூறிய பாசுரப் பலன்களும் பலிக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே ஆடிப்பூரத்தன்று அவதரித்த ஆண்டாளின் அருள் கிடைக்க ஆடிப்பூரத்தன்று ஆண்டாளைப் போற்றிப் பாடிடுவோம்.