பலருக்கும் தேவாரம், திருவாசகம் தெரிந்திருக்கும் அளவிற்குத் திருமந்திரம் தெரிந்திருக்கும் என்பதற்கில்லை. சைவ வட்டாரம் அறிந்திருக்கலாமே ஒழிய, பொதுநிலையில் திருமந்திரம் பரவலாக அறியப்பட்ட நூல் என்று சொல்ல முடியாது. சைவ மரபுமேகூடத் தேவாரம், திருவாசகம், பெரிய புராணத்தைப் போற்றிய அளவிற்குத் திருமந்திரத்தைப் போற்றிற்று என்று சொல்லத் தயக்கமாகவே உள்ளது. நல்லது. என்ன வகையான நூல் இந்தத் திருமந்திரம்?
சைவத் திருமுறை நூல்கள் 12-ல், பத்தாம் திருமுறையாக வருகிறது திருமூலர் எழுதிய திருமந்திரம். 11-ம் திருமுறை 12 பேர் தனித்தனியாகப் பாடிய, திருமுருகாற்றுப்படையை உள்ளிட்ட, சிற்றிலக்கிய வகை நூல்களின் தொகுப்பாக, 12-ம் திருமுறை திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணமாகப் பன்னிரு திருமுறை வைப்பு நிறைகிறது.
பத்தாம் திருமுறையாகிய திருமூலர் திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது. திருமந்திரத்தை அறியாதவர்களும்கூடத் திருமந்திரப் பாடல் வரிகள் சிலவற்றை அறிந்திருப்பார்கள். அவற்றில் சில:
“ஒன்றே குலமும் ஒருவனே தேவன்,” “அன்பே சிவம்,” “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்,” “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே,” “உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்,” “உடம்பார் அழியில் உயிரார் அழிவர்,” “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”.
இந்த வரிகளில் ஒரு கலக முழக்கம் உள்ளொடுங்கியிருப்பதைக் காண்க. குலங்களும் கடவுளரும் தர வரிசைப்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை ஒன்றாக்கியதும், இறைவனுக்கு வடிவங்கள் வழங்கிப் பூசித்து வரும் நிலையில் பூசிக்க வகையற்ற அன்பு என்னும் உள்ளத்துணர்வைக் கடவுளாக்கியதும், வரிசை முறை பார்த்தும் வாங்குகிறவர்களின் கை பார்த்துமே வழங்கி வந்த நிலையில் வரிசைமுறை பாராமல் வையத்தில் உள்ளோர் எல்லாம் வந்து வாங்கிக் கொள்க என்று கடை திறந்ததும், என்னை நன்றாகப் படைத்த இறைவன் தன்னை நன்றாகப் படைப்பதற்குத் தமிழையே தேர்ந்துகொண்டான் என்று தமிழை நிறுத்தியதும், உடம்பும் பொய், உடம்பு வாழும் உலகமும் பொய் என்று வழங்கப்பட்ட நிலையில் உடம்பை உண்மை என்றதும் உடம்பு உயிரை வளர்க்கும் கருவி என்றதும் நிறுவப்பட்ட மரபுக்கு மாற்றுச் சொல்லும் முயற்சி அல்லவா?
திருமூலர் என்கிற ஆன்மிக அடியாரின் இந்த வரிகளை மக்கள் நாவில் புழங்கும் வரிகளாகப் பரப்பியவர்கள், மரபை மறுதலித்த சுயமரியாதை இயக்கத்தினரும் அவர்களைப் போன்ற பிறரும் என்பது, இந்த வரிகளில் இருக்கும் கலக உள்ளடக்கத்துக்குச் சாட்சி அல்லவா? மரபார்ந்த சைவம் திருமந்திரத்தை ஒரு திருமுறையாக அங்கீகரித்தாலும் பெரிதாகக் கொண்டாடாமல் விட்டதற்கும், திருமந்திரத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்ததற்கும் இவை போதுமான ஆதாரங்கள் இல்லையா?
அப்படியென்றால், திருமந்திரம் எதைப் பேசுகிறது? திருமூலர் வழங்கும் நெறி என்ன? குறிப்பிட்ட நெறி ஒன்றுக்கு உடன்பட்டு அதன் வழியாக உயிரை ஒழுங்குபடுத்திச் செலுத்துவதா? அல்லது நிறுவப்பட்டுவிட்டவற்றுக்கு எதிராகக் கலகத்தைத் தூண்டுவதா? எது திருமூலரின் மையக் கருதுகோள்?
இறைவனுக்குப் போற்றி பாடுகிற பக்திப் பனுவல்களோடு சேர்த்து வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் திருமந்திரம் பக்திப் பனுவல் அல்ல. அது மெய்யியல் நூல். உண்மையை அறிவதும் அடைவதும் எப்படி என்பதுதான் திருமந்திரம் கருதும் கேள்வி. உண்மையைக் குறிப்பிட்ட நெறி ஒன்றின் வழியாக அறியலாம், அடையலாம் என்றால், மெத்தச் சரி. திருமூலருக்கு மறுப்பேதும் இல்லை.
பாதை இருக்கிறது; பாதைக்குப் பக்கவாட்டிலோ சில்லென்று பூத்த சிறுநெருஞ்சில் காடு இருக்கிறது. பாதை பிறழாமல் நடப்பீர்கள் என்றால் பாதங்களில், நெருஞ்சில் முள் பாயாது. பாதை பிறழ்ந்தால் பாயும். எனவே பாதை பிறழாது நடவுங்கள்.
நெறியைப் படைத்தான்;
நெருஞ்சில் படைத்தான்!
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!
நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! (திருமந்திரம், 1617)
‘இதுதான் பாதை, இதுதான் பயணம்’ என்று கொள்கை வகுத்துக்கொண்ட பின்னால் பாதை மாறக் கூடாது. மாறினால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் பாயுந்தானே?
சரி. இதுவரையில் பாதைக்குத் தொந்தரவில்லாமல் பக்கவாட்டில் பூத்துக் கிடந்த நெருஞ்சில் முள் இப்போது பாதையிலேயே படரத் தொடங்கிவிட்டது என்றாலோ பாதையைப் பயன்படுத்தவே முடியாதபடி முற்றாக விழுங்கிவிட்டது என்றாலோ ஒன்று முள்ளை வெட்டிப் போட்டுப் பாதையைப் பண்படுத்த வேண்டும். அல்லது இதுவரை பயணித்து வந்த பாதை பண்படாப் பாதை, இனிப் பயன்படாப் பாதை என்று பாதையைக் கைவிட்டுவிட வேண்டும். புத்தியுள்ளவர்கள் செய்யக்கூடியன இவைதாமே?
அவற்றையே செய்கிறார் திருமூலர். அப்படியான முன்னெடுப்போடு சொல்லப்பட்டவைதாம் முன்னர் சொன்ன கலக வரிகள். திருமூலர் தன்னியல்பில் உடன்பாட்டாளர்; உடன்பட வாய்ப்பில்லை என்றால் கொஞ்சமும் தயங்காத மறுதலிப்பாளர்.
திருமூலரின் உடன்பாட்டைக் கவனியுங்கள்:
ஒன்றுஅவன் தானே;
இரண்டுஅவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்;
நான்கு உணர்ந் தான்; ஐந்து
வென்றனன்; ஆறு விரிந்தனன்;
ஏழுஉம்பர்ச்சென்றனன்;
தான்இருந் தான் உணர்ந்து எட்டே.
(திருமந்திரம், 1)
அவன் ஒன்று. அவனோடு பிரிப்பற நிற்கும் சத்தியாகிய அவனது அருள் தனிக் கணக்கென்றால் இரண்டு. படைத்தல், காத்தல், அழித்தல் என்று அவன் நிற்கும் நிலை மூன்று; அறம், பொருள், இன்பம், வீடு என்று அவன் உணர்த்துவன நான்கு; புலன்கள் ஐந்தையும் வென்றவன்; மந்திரமாக, பதமாக, வன்னமாக, புவனமாக, தத்துவமாக, கலையாக என்று ஆறாகவும் விரிந்து நின்றவன்; பிரமவுலகம், விட்டுணுவுலகம், உருத்திரவுலகம், மகேசுரவுலகம், சதாசிவவுலகம், சத்தியுலகம், சிவவுலகம் என்று ஏழு உலகங்களையும் தாண்டி அப்பாலே சென்றவன்; அவனை உணர்ந்து எட்டு(க) என்று திருமூலர் இறைவனை ‘எண்ணிப்’ பாடுகிறார்.
‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் ‘ஒன்றானவன், உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன், நன்றான வேதத்தில் நான்கானவன், நமச்சிவாய என ஐந்தானவன், இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன், இன்னிசைச் சுரங்களில் ஏழானவன், சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்’ என்னும் கண்ணதாசன் பாடலை திருமந்திரத்தின் இந்த முதற் பாடலுடன் ஒப்பிட்டுக்கொள்வார் ஒப்பிட்டுக் கொள்க.
எனவே, திருமூலர் முற்றாக மரபை மறுத்தவர் அல்லர். கலகத்தையே நெறியாகக் கொண்டவரும் அல்லர். மரபார்ந்த நெறிகளையே முன்வைக்க விரும்புகிறவர் அவர். அவற்றில் செல்ல முடிந்தவர்கள் செல்க. அதுவே நல்லது. ஏனெனில் மரபார்ந்த நெறிகள் ராசபாட்டைகள். நீங்கள் அடைய விரும்புகிற பதவிகளுக்கு அவை உங்களை இட்டுச் செல்லும். என்றாலும் நெறிகள் உங்களை அடிமைப்படுத்தும் பொறிகள் ஆகுமானால், நெறிகளை விட்டு நீங்குக. உங்கள் உள்ளத்தின்வழிச் செல்க என்று ஆபத்துக் கால ஒற்றையடிப் பாதை ஒன்றையும் காட்டி வைக்கிறார்.
ஐய மாக்கடல் ஆழ்ந்த உயிர்க்கெலாம்
கையில் ஆமல கம்எனக் காட்டுவான்
மையல் தீர்திரு மந்திரம் செப்பிய
செய்ய பொற்றிரு மூலனைச் சிந்திப்பாம்
-என்கிறது ‘பதி பசு பாச’ விளக்கம் என்னும் நூல். சந்தேகக் கடலில் ஆழ்ந்த உயிர்களுக்கு எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல உள்ளது விளக்குவான் —மயக்கத்தைத் தீர்க்கின்ற திருமந்திரத்தைச் செய்த திருமூலன்.
(அவனைச் சிந்திக்கலாம்.)
கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com