ஆன்மிகம்

விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயிலில் உலக நன்மைக்காக 1,008 சங்காபிஷேகம்

இ.மணிகண்டன்

விருதுநகர்: மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாத சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக மூலவருக்கு 1,008 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விருதுநகர் மேலரத வீதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாத சோமவார திங்கட் கிழமைகளில், உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேக பூஜைகள் நடை பெறுவது வழக்கம்.

கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவன் கோயில்களில் நடைபெறும் சங்காபிஷேகங்களில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தால், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைபேறும், தொழில் வளர்ச்சியும், நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், நாட்டில் அமைதி நிலவும், உலக நன்மையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதன்படி, இன்று விருதுநகர் ஸ்ரீசொக்கநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, உலக நன்மைக்காக 1,008 சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் சமஸ்கிருத ஓம் என்ற வடிவத்தில் ருத்ராட்சம், சங்கு கொண்டு அலங்காரம் செய்திருந்தனர். மேலும் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு, சிவாச்சாரியார்கள் அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதையடுத்து மூலவர் ஸ்ரீ சொக்கநாதருக்கு புனித நீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 1008 சங்காபிஷேக பூஜைகளில் விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT