காரைக்கால்: 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் பாரதியார் சாலையில் தனிக் கோயில் உள்ளது. இங்கு, அம்மையார் வரலாற்றை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு இவ்விழா ஜூன் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. முன்னதாக, அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரியத் தலைவர் ஆர்.வெற்றிச்செல்வன், துணைத் தலைவர் சி.புகழேந்தி, பொருளாளர் வி.சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஜூலை 2-ம் தேதி பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா (மாங்கனிகளை வீசி இறைத்து வழிபடுதல்) நடைபெறும்.