காஞ்சிபுரம்/பொன்னேரி: காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காஞ்சிபுரத்தில் வரலாற்று சிறப்பு மிக்கது பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில். இந்த கோயில் வைகாசித் திருவிழா கடந்த மே மாதம் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி பெருமாள் காலை, மாலை இரு வேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை ஜூன் 2-ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி தேவி, பூதேவியுடன் உற்சவமூர்த்தி அதிகாலையில் கோயிலில் இருந்து தேரடிக்கு எழுந்தருளினார்.
இந்தத் தேரை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேரோட்ட விழாவில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், அறநிலையத் துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, கோயில் செயல் அலுவலர் சீனுவாசன் பங்கேற்றனர்.
இந்த தேர் திருவிழாவையொட்டி சுமார் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள், வர்த்தக நிறுவனத்தினர் பலர் அன்னதானம், நீர், மோர் தானங்கள் செய்தனர்.இந்த தேர் திருவிழாவையொட்டி காஞ்சிமாநகருக்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்டன. கனரக வாகனங்கள் எதுவும் நகருக்குள் அனுமதிக்கப்படவில்லை.
மீஞ்சூர் வரதராஜர் கோயில்: இதேபோல், வடகாஞ்சி என்று அழைக்கப்படும் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோயிலிலும் நேற்று தேர்த் திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில், அதிகாலையில் தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வரதராஜ பெருமாள், தேவி, பூதேவியுடன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, காலை 8 மணியளவில், திருத்தேர் தேரடியிலிருந்து புறப்பட்டு, 4 மாட வீதிகளில் உலா வந்து, மீண்டும் தேரடியை வந்தடைந்தது.