ரமலான் மாதத்தின் வருகையை முன்னிட்டு, ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் அம்மாதத்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். காரணம், நபி (ஸல்) நவின்றதாக அபூஹுரைரா (ரலி) இவ்வாறு அறிவிக்கிறார்கள்.
“ரமலான் மாதம் வந்து விட்டால் அல்லாஹ்வின் அருள் நிறைந்த வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன். சைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன.”
ரமலான் மாதத்தைக் கொண்டாடும் வாய்ப்பை இந்த ஆண்டும் அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். இம்மாதத்தில் அல்லாஹ்வின் அருளும், அன்பும் நாம் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்கு அருளப்படுகிறது. அல்லாஹ்வின் அருளாலும் வெகுமதிகளாலும் நிரம்பிக் காணப்படும் இம்மாதத்தில், அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவனது அடியார்களுக்கு இடைவிடாது தொடர்ந்து பொழியப்படுகிறது. தனது அடியார்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்குத் தயாராக இருக்கின்றான் என்பதை அறிவிக்கும் வகையில் சொர்க்கத்தின் கதவுகளைத் திறக்கின்றான். எனவே, இப்புனிதமிக்க மாதத்தை நாம் கண்ணியம் செய்வதும், விழாவாக எடுத்துக் கொண்டாடுவதும் அவசியமாகும்.
“பரக்கத்கள்” எனும் அபிவிருத்திகள் பொழியும் இப்புனிதமிக்க மாதத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்குப் பின்வரும் முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
முதன்முதலாக, இம்மாதத்தில் அதிகப் பட்ச வெகுமதிகளை அறுவடை செய்துகொள்ளும் வாய்ப்பை நாம் நழுவவிடக் கூடாது. இம்மாதத்தை, முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளாத வகையில் கடந்து சென்றுவிடுவதற்கு இடமளித்துவிடக் கூடாது. நமது கரங்களை ஏந்தி, அல்லாஹ்விடம் துஆ (பிரார்த்தனை) செய்வதை அதிகரித்துக்கொள்ள வேண்டும். நபி (ஸல்) நவின்றதன்படி, “மூன்று நபர்கள் கேட்கும் பிரார்த்தனையை அல்லாஹ் நிராகரிப்பதில்லை. ஒரு நோன்பாளி தனது நோன்பைத் திறக்கும் போதும் முடிக்கும்போதும் அவரது பிரார்த்தனைகள் மறுக்கப்படுவதில்லை. இரண்டாவது நபர் நீதமானான அரசர். மூன்றாவது நபர் அநீதி இழைக்கப்பட்டவர். ”
இப்புனிதமிக்க ரமலான் மாதத்தில், “லைலத்துல் கத்ரு” எனும் ஒரு சிறப்பான இரவை அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளான். ஆயிரம் மாதங்களாகத் தொடர்ந்து வணக்கத்தில் ஈடுபட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்குமோ, அந்த அளவு நன்மைகள் அந்த இரவுப் பொழுதில் வணக்கத்தில் ஈடுபடுவதால் கிடைத்து விடும். “லைலத்துல் கத்ரு” எனும் புனிதமிக்க அந்த இரவை, ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் தேடிக் கொள்ளுமாறு நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ள போதிலும், ரமலான் மாதத்தின் கடைசிப் பகுதியில் மட்டுமே நாம் நற்காரியங்களைச் செய்ய வேண்டும் எனக் கருதி விடக் கூடாது.
சிறப்புமிக்க அந்த இரவின் நன்மைகளை அறுவடை செய்யும் நமது முயற்சிகளை, முதல் இரவின் தராவீஹ் தொழுகையிலிருந்தே ஆரம்பித்து விட வேண்டும். சஹர் சாப்பிடுவதற்காக நாம் எழும் போது, அந்நேரத்தைச் சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றில் மட்டும் கழித்துவிடக் கூடாது. அந்நேரத்தில் பிரார்த்தனைகளைப் புரியுமாறும், அல்லாஹ்விடம் பாவமன்னிப்பைத் தேடுமாறும், வணக்க வழிபாடுகளில் ஈடுபடுமாறும் நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ளோம்.
ஒருமுறை, இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம், துஆக்கள் அல்லாஹ்வால் அதிகம் ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது? எனக் கேட்கப்பட்டது. அதற்கு இறைத் தூதர், “இரவின் இறுதிப் பகுதி (அதாவது “சஹர்” நேரம்) மற்றும் ஒவ்வொரு ஃபர்ளான (கடமையான) தொழுகைகளுக்குப் பின்பும்” எனப் பதில் கூறினார்கள்.
மிகவும் முக்கியமாக, நமது குடும்பத்தார்களிடம், நோன்பு திறக்கும் நேரத்தில் ஒன்று சேர்ந்து நோன்பு திறக்குமாறும், துஆ மற்றும் வணக்கங்களில் ஈடுபடும்போது ஒன்றிணைந்து செயல்படுமாறும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
புனிதமிக்க இம்மாதத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், ரமலான் மாதத்தின் பரக்கத்கள் எனும் அபிவிருத்திகளை அறுவடை செய்வதற்குத் தடையாகவுள்ள எந்தத் தவறான காரியத்திலும் நாம் ஈடுபடக் கூடாது. உளப்பூர்வமாக நாம் நோன்பு நோற்க வேண்டும். நமது சொல் மற்றும் செயல்களின் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பாவங்கள் மற்றும் எவ்விதப் பயனையும் தராத செயல்களிலிருந்து விலகியிருக்க வேண்டும். நமது உள்ளங்களில் மற்றவர்களுக்கு எதிராகப் பகைமை, குரோதம் இல்லாதிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நமது செயல்களில் கர்வ மிக்கவர்களாக இருப்பது கூடாது.
ரமலான் மாதம் பாவமன்னிப்புகள் வழங்கப்படும் மாதமாகும். எனவே, நம்மையும் நமது குடும்பத்தாரையும் தொடர்ந்து பாவங்களைச் செய்யும் நிலையிலும் வரம்பு மீறும் நிலையிலும் விட்டுவிடக் கூடாது. இம்மாதத்தின் புனிதத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். பாவமான காரியங்களில் ஈடுபடுவதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிற செயல்களில் அல்லது நிகழ்ச்சிகளில் பங்குகொள்கின்ற நண்பர்கள் அல்லது உறவினர்களை நாம் பெற்றிருந்தால், அவர்களை உடனே அணுகி, நிதானமாக அவர்களுக்கு நினைவூட்டித் திருத்த முயல வேண்டும்.
ரமலான் மாதத்தில் நமது குடும்பத்தாருக்குக் கல்வியறிவை அதிகப்படுத்தி, அவர்களைப் பலப்படுத்த வேண்டும். பல நபர்களுக்கு நோன்பின் சட்ட திட்டங்கள் தெரிவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.