உதய்பூர் ராஜஸ்தானில் நாம் காண வேண்டிய நகரங்களுள் முக்கியமான ஒன்று. மேவார் பகுதி என்றும் அழைக்கப்படும் சிசோடியா வம்சத்தவர் விட்டுச்சென்ற பரிசு உதய்பூர்.
மலைகள் சூழ்ந்திருந்தாலும் பூங்காக்களும் ஏரிகளும் நிறைந்து பசுமை தோற்றம் புனைந்த பூமி இது. இவர்கள் விஷ்ணு பக்தர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த வழியில் வரும் கோவில்தான் ஜக்தீஷ்ஜி கோவில்.
சிட்டி பேலஸ் என்று அழைக்கப்படும் ராஜபுத்திர அரண்மனையின் மிக அருகே உள்ளது இக்கோவில். 1651-ல் இப் பகுதியை ஆண்ட மகாராணா ஜகத் சிங்க் (1621-53)என்பவரால் கட்டப்பட்டது.
இது காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. அரண்மனை வாசலிலிருந்தே இதனுடைய பரிமாணம் தெரிகிறது. 25 அடி உயரமுள்ள பீடத்தில் 100 அடி உயரத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது. வாசலில் இரு யானைகள் துதிக்கை தூக்கிய நிலையில் பக்தர்களை வரவேற்பது போல் நிற்கின்றன.
11 கல் தொகுதிகளைக் கொண்டு கட்டப்பட்ட இந்த உருவங்களில் கணுக்கள் தெரியவில்லை. தங்க உறையால் மூடப்பட்டுள்ளது.அதற்கு அருகில் கருட பகவானின் சந்நிதி. பித்தளை மற்றும் இதர உலோகங்களால் மனிதன் பாதி, பறவை பாதி என்று உருவாக்கப்பட்ட இந்த விக்கிரகம் இந்தியாவிலயே மிகச் சிறந்தவைகளுள் ஒன்று என்றும் கூறப்படுகிறது.
சதுர்புஜனாக விஷ்ணு
மண்டபத்தை கடந்தால் கருவறை. சதுர்புஜனாக விஷ்ணு காட்சி தருகிறார். விக்ரகம் ஒற்றைக் கருங் கல்லைக் கொண்டு வேயப்பட்டது. முகத்தில் அத்தனை பொலிவு. சுண்டி இழுக்கிறது. அந்த அமைதி தரும் வதனம் எவரையும் உறைக்கத்தக்கது.
விக்ரகத்தின் உயரம் 87 அங்குலம்.உள்ளயே அவருக்கு வலப்பக்கம் கிரிதர கோபாலன், கிருஷ்ணர் மற்றும் மஹா லக்ஷ்மியின் விக்ரகங்கள் உள்ளன. மூலவரின் மேல் சர்ப்பங்கள் சுற்றியுள்ளது போல் அமைக்கப் பட்டுள்ளது.கோவிலின் நான்கு மூலைகளிலும் பார்வதி,கௌரி சங்கர்,கணபதி,சூர்யன் மற்றும் சக்திக்கு தனித்தனியாக சந்நிதிகள் உள்ளன.
கோவில் புராணம்
ஒரு சமயம் மகாராணா வேட்டை பயணத்தின் நிமித்தம் சென்ற போது ஒரு சாது அவருக்கு ஒரு குளிகையை அளித்து அதை நாக்கில் வைத்துக்கொண்டால் நினைத்த இடத்திற்குப் பறந்து செல்ல முடியும் என்ற வரம் அருளினார்.
இந்த அற்புத சக்தியினால் ராணா தினமும் பூரிக்குச் சென்று ஜகன்னாதரை தரிசித்துவந்தார். ஒரு நாள் தாமதமாகிவிட்டது.கோவில் நடை சாத்திவிட்டார்கள்.கோவில் வழக்கப்படி இன்னும் 15 நாட்களுக்குத் திறக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் வியாகூலமடைந்த மன்னனின் கனவில் பகவான் ஜகதீஷ்ஜி தோன்றி உதய்பூரில் தனக்கு ஒரு கோவில் கட்டும்படி பணித்தார். அங்கே தான் வருவதாகவும் கூறினார். ஊர் திரும்பிய மன்னன் அவ்வாறே கோவில் கட்ட ஆரம்பித்தான்.
மனம் மயக்கும் சிற்பங்கள்
எண்கோண வடிவில் உள்ள சபா மண்டபத்தின் வெளிப்புறச் சுவர்கள்,கோபுரம் என்று எல்லா இடத்திலும் சிற்பங்கள் மதி மயக்குகின்றன. நடன மாதர்கள் அணி செய்கின்றனர். இன்னொரு பலகத்தில் யானைகள், குதிரை சவாரி செய்பவர்கள், முதலைகள் என்று எண்ணவே முடியாத அளவிற்கு வாரிக் கொட்டியிருக்கிறார்கள். இது கஜுராஹோ சிற்பங்களை நினைவு படுத்துகிறது.
ஜகன்நாதரின் மேல் பக்தியும் ஆகமங்களில் கூறியுள்ளபடி வழிபாடும், பிரார்த்தனையும் இந்தக் கோவிலின் முக்கிய விஷயங்களாகும்.