மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மையால் இன்று பெரும்பாலானோர் பெரும் வாழ்வியல் சிக்கல்களை எதிர் கொண்டுள்ளனர்.இப்படியான காலகட்டத்தில் சிறிய விஷயங்களைக் கொண்டாடும் மனநிலையைக் காண்பது அரிதாகிவிட்டது.
அவ்வறான ஒரு மகிழ்ச்சி வீடியோதான் இணையத்தில் சில நாட்களாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் பகிர்த்துள்ளார்.
வீடியோவில், ஒரு தந்தை பழைய சைக்கிள் ஒன்றை வாங்கிவருகிறார். அந்த சைக்கிளுக்கு சிறப்புப் பூஜைகளை அவர் செய்யும்போது அவரது மகன் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார். தந்தை, மகன் என இருவரும் கொள்ளும் மகிழ்ச்சி காண்போரையும் தொற்றிக் கொள்கிறது.
இந்த வீடியோவைப் பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் ” இது ஒரு பழைய சைக்கிள்தான் ஆனால் அவர்களின் முகங்களை பாருங்கள்..மெர்சிடஸ் மென்ஸ் காரை வாங்கியது போல் மகிழ்கிறர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்ற எந்தத் தகவலும் இல்லை.
ஆனாலும், மகிழ்ச்சியைக் கடத்தும் இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர்.