வத்தலகுண்டு அருகே பெண்ணிடம் நான்கு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிய மூன்று இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நகையைப் பறித்த மூன்று இளைஞர்களைப் பிடிக்க எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது மனைவி செல்வியுடன் திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
சித்தையன்கோட்டை பிரிவு அருகே சென்றபோது பின்தொடர்ந்து பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் செல்வி அணிந்திருந்த நான்கு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு திண்டுக்கல் சாலையில் அதிவேகமாகத் தப்பிச் சென்றனர். இதைப் பார்த்த பின்னால் காரில் வந்துகொண்டிருந்தவர்கள், இளைஞர்களை வேகமாகப் பின்தொடர்ந்தனர்.
காரில் இருந்த நபர், நகையைப் பறித்தவர்களை விரட்டிச் சென்றதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதில் பைக்கை கார் முந்துவதும், பின்னர் எதிரே வாகனம் வந்ததால் பைக், காரை முந்துவதுமாக சினிமா சேசிங் போல் அந்த வீடியோ உள்ளது. இறுதியில் பைக்கில் சென்ற திருடர்கள் தொடர்ந்து எதிரே வாகனங்கள் வந்ததால் காரில் சென்றவர்களிடமிருந்து தப்பினர். காரில் சென்றவர்கள் வெளியிட்ட வீடியோவை வைத்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.
நகையைப் பறித்தவர்களின் அடையாளம் தெரிந்தநிலையில் விரைவில் பிடித்துவிடுவோம் என போலீஸார் தெரிவித்தனர்.