சமூக வலைதளம்

அஜித் முகக்கவசம், விஜய்யின் சைக்கிள் சவாரி: நெட்டிசன்கள் விவாதம்

செய்திப்பிரிவு

தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் அஜித் அணிந்திருந்த முகக்கவசம் குறித்தும், விஜய் சைக்கிளில் வந்தது குறித்தும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதில் வாக்களிக்க வந்த திரை பிரபலங்களை நோக்கி ரசிகர்களின் ஆர்வம் அதிகமானது. வழக்கமாக காரில் வந்து வாக்களிக்கும் நடிகர் விஜய் இன்று சைக்கிளில் வந்து வாக்களித்தார். அவருடன் அவரது ரசிகர் மன்றத்தினர் உடன் பாதுகாப்புக்கு வந்தனர்.

பின்னர் திரும்பிச் செல்ல முயன்ற விஜய், அவரது சைக்கிளை எடுக்கவே முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் தன் கார் ஓட்டுநரின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து விஜய் சென்றார். அவருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீஸார் தடியடி நடத்தினர்.

அதேபோன்று நடிகர் அஜித் வழக்கம்போல் காலையில் வந்து வாக்களித்தார். அவர் அணிந்து வந்த முகக்கவசத்தில் சிவப்பு நிற பட்டையும் கருப்பு நிறத்தில் முகக்கவசமும் இருப்பதால் அதுகுறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துகளை ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பதிவு செய்து வருகின்றனர்.

அதேபோன்று விஜய் சைக்கிளில் வந்தது, பெட்ரோல் -டீசல் விலை உயர்வைக் குறிக்கத்தான் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். சிலர் 2019-ல் ஏற்கெனவே நடிகர் ஆர்யா இதேபோல் சைக்கிளில் வந்து வாக்களித்ததைச் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனாலும், இது தொடர்பான விவாதம் நீடிக்கிறது.

இந்நிலையில், விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது குறித்து கதை கட்டாதீர்கள் என குஷ்பு கேட்டுக்கொண்டார்.

இதனிடையே சைக்கிளில் வந்தது குறித்து நடிகர் விஜய் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ''வீட்டிற்குப் பின்புறம் வாக்குச்சாவடி உள்ளது. அது சிறிய தெரு என்பதால் காரில் போக முடியாது என்பதால் சைக்கிளில் விஜய் வந்தார்'' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT