பிரதமர் மோடியின் தமிழக வருகையை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது குஷ்பு பதிவிட்ட பழைய ட்வீட்களின் ஸ்கிரீன் ஷாட்களை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். இதற்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடி சென்னையில் இன்று பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியின் தமிழக வருகை ட்விட்டர் தளத்தில் கடும் விவாதத்தை உண்டாக்கியது. அவரது வருகை உறுதி செய்யப்பட்ட உடனேயே எதிர்க்கட்சியினர் #GoBackModi என்ற ஹேஷ்டேகில் ட்வீட் செய்யத் தொடங்கினார்கள். இது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டானது. உடனடியாக பாஜகவினர் #TNWelcomesModi என்ற ஹேஷ்டேகில் பிரதமருக்கு வரவேற்பு தெரிவித்து ட்வீட் செய்யத் தொடங்கினார்கள்.
இந்த ட்ரெண்டிங் போட்டியில், சமீபத்தில் பாஜகவில் இணைந்து திருவில்லிக்கேணி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்புவும் இடம்பெற்றார். ட்விட்டர் பக்கத்தில் அவரைப் பின்தொடர்பவர்களோ, அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது பிரதமர் மோடியின் தமிழக வருகையை எதிர்த்துப் போட்ட ட்வீட்களின் ஸ்கிரீன் ஷாட்களை வைத்துக் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
''எதிரணியினர் தாங்கள் எதிர்க்கப் புதிதாக எதுவும் இல்லையெனில் எப்படிக் கடந்தகால பக்கங்களைப் புரட்டுவார்கள் என்று ட்வீட் செய்திருந்தேன். நான் என்னுடைய ட்வீட்களை நீக்கவில்லை. இந்த நாட்டை தோல்வியடையச் செய்த உங்கள் கட்சிக்கு நான் 100% பங்களிப்பைக் கொடுத்தேன். காங்கிரஸில் இருக்கும்போது பாஜக கொண்டுவந்த திட்டங்களை ஆதரித்துள்ளேன். அதை ரீட்வீட் செய்யமாட்டீர்களா?.
காங்கிரஸ் தலைவர்கள் என்னுடைய பழைய பதிவுகளை ரீட்வீட் செய்வதில் கடும் முயற்சிகளை மேற்கொள்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. குறைந்தபட்சம் நானாவது உங்களை பிஸியாக வைத்துள்ளேனே என்று சந்தோஷப்படுகிறேன். இல்லையெனில் உங்கள் தலைவரைப் போல உங்களுக்கும் இது ஓய்வு நேரமாகத்தான் இருக்கும்.
எனக்கு எதிராகத் தொடர்ந்து வேலை செய்யுங்கள் அப்போதுதான் நானும் அதிகம் செயல்பட முடியும். பணத்துக்கு விலைபோன மூன்றாம் தர நபர் என்று சொல்கிறார்கள். நானும் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தினால் நீங்கள் அதைப் பாராட்ட மாட்டீர்கள். நானும் அப்படிப் பேசமாட்டேன். காங்கிரஸ் எப்படிப்பட்ட கட்சி என்பதை உலகம் பார்க்கட்டும்''.
இவ்வாறு குஷ்பு பதிவிட்டுள்ளார்.
மேலும், திருவல்லிக்கேணியில் வயதான பெண்மணி ஒருவர் தனது கன்னத்தைப் பிடித்துள்ள புகைப்படத்தைப் பதிவிட்டார் குஷ்பு. அதற்கு, "சில வயதான நபர்கள் இன்னும் எம்ஜிஆர் உயிரோடு இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பதைப் போல, இந்தப் பாட்டி நீங்கள் இன்னும் திமுகவில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்" என்று நெட்டிசன் ஒருவர் கிண்டலாகப் பதிவிட்டார்.
அவருக்கு பதிலளிக்கும் வகையில், "கலைஞர் இறந்ததுமே திமுகவின் கதையும் முடிந்துவிட்டது என்பது உலகத்துக்கே தெரியும். உங்களைப் போன்றவர்கள் கற்பனை உலகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்" என்று தெரிவித்துள்ளார் குஷ்பு.