தண்ணீர் என்று நினைத்துத் தவறுதலாக சானிடைசரைக் குடித்த அதிகாரியால் மும்பை மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை பிஎம்சி மாநகராட்சியில் இணை ஆணையராகப் பணியாற்றி வருபவர் ரமேஷ் பவார். அவர் இன்று (பிப்.3) மாநகராட்சிக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்காக மாநகராட்சி அலுவலகம் வந்தார். அப்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேசைகளில் சானிடைசர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது அவர் தண்ணீர் என்று நினைத்துத் தவறுதலாக சானிடைசரைக் குடித்ததால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ரமேஷ் பவார் கூறும்போது, ''பேச ஆரம்பிக்கும் முன் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம் என்று நினைத்து, அருகில் இருந்த பாட்டிலை எடுத்தேன். தண்ணீர் பாட்டிலும் சானிடைசர் பாட்டிலும் ஒரே மாதிரியாக இருந்ததால், தவறுதலாக சானிடைசரை எடுத்து வாயில் ஊற்றிவிட்டேன். எனினும் சுவையை அறிந்து முழுமையாகக் குடிக்கவில்லை. உடனே தண்ணீரைக் கொண்டு வாயைக் கொப்பளித்து விட்டேன்'' என்று தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.