பயனர்களின் ட்வீட்டில் தேவையில்லாமல் வரும் பதில் ட்வீட்டுக்களைக் கட்டுப்படுத்த, ட்விட்டர் புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.
தற்போது ட்விட்டரில் ஒரு பயனர் கருத்துப் பதிவிட்டால் அதற்கு யார் வேண்டுமானாலும் எதிர்வினையாற்றலாம். எதிர்வினையாற்றுபவர் பயனரை பின் தொடருவதோ அல்லது அவரைப் பயனர் பின் தொடர்வதோ கட்டாயம் அல்ல. ஆனால் இதனால் ஒரு ட்வீட்டுக்கு தொடர்பில்லாத யார் வேண்டுமானாலும் அதற்குப் பதில் போடலாம், விவாதம் செய்யலாம் என்ற நிலை ட்விட்டரில் உள்ளது. இதனாலேயே ட்விட்டரில் அவ்வப்போது நிறைய வாக்குவாதங்கள் நடைபெறுகின்றன.
இப்படி சம்பந்தமில்லாத ஆட்கள் ட்வீட்டுக்கு பதில் போடுவதைக் கட்டுப்படுத்த ட்விட்டர் புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக மூன்று வித தேர்வுகளை ட்விட்டர் கொடுக்கும். ஒன்று, இப்போது இருப்பது போலவே அந்த ட்வீட்டை யார் வேண்டுமானாலும் பார்த்துப் பதில் போடலாம்,
இரண்டு பயனர் பின் தொடர்பவர்கள் மட்டுமே பதில் போடலாம்
மூன்றும், பயனர் குறிப்பிடும் ஆட்கள் மட்டுமே பதில் போடலாம்.
கடைசி இரண்டுத் தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் அது தனியாகக் குறிப்பிடப்படும். மேலும் ரிப்ளை செய்வதற்கான ஐகானையும், யாரை அனுமதிக்கிறோமோ அவர்களால் மட்டுமே இயக்க முடியும். மற்றபடி யார் வேண்டுமானாலும் இந்த ட்வீட்டுகளைப் பார்க்கலாம், தங்கள் கருத்தோடு ரீட்வீட் செய்யலாம், விரும்பலாம். இப்போதைக்கு சோதனை முயற்சியாக ஒரு சிலருக்கு மட்டுமே இந்த வசதி கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவதாக ட்விட்டர் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்திலிருந்தே இதற்கான வேலைகளை ட்விட்டர் தொடங்கிவிட்டது.
இதோடு, ஒரு ட்வீட்டுக்கு சம்பந்தப்பட்ட அத்தனை உரையாடலையும் எளிதாகப் படிக்குமாறு தனது பக்கத்தின் தோற்றத்தை ட்விட்டர் மாற்றவுள்ளது.