சமூக வலைதளம்

இணையத்தில் வைரலாகும் டேவிட் வார்னரின் டிக் டாக் வீடியோ

செய்திப்பிரிவு

'புட்ட பொம்மா' பாடலுக்கு டேவிட் வார்னர் தனது மனைவியுடன் செய்துள்ள டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில், த்ரிவிக்ரம் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக வந்த படம் ’அலா வைகுந்தபுரம்லோ’. குடும்ப உறவுகள், சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்‌ஷன் என தரமான பொழுதுபோக்குப் படமாகப் பாராட்டப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தப் படம் வெளியாகும் முன்னரே தமன் இசையில் பாடல்கள் ஹிட்டடித்தன. படத்தின் பெரிய வெற்றிக்குப் பாடல்களும் ஒரு முக்கியக் காரணம். இந்தப் படத்தின் பாடல்கள் பல்வேறு இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் அதிகம் கேட்கப்படும் பாடல்களாக முன்னணியில் இடம் பெற்றன.

மேலும், இந்தப் படத்தில் இடம்பெற்ற 'புட்ட பொம்மா' என்ற பாடல் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலுக்கு அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே இருவரின் நடனமும் வெகுவாகப் பேசப்பட்டது. இருவரது நடன அசைவுகளைப் பின்பற்றி பலரும் அதேபோல் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டனர்.

டிக் டாக் தளத்தில் 'புட்டா பொம்மா' பாடலுக்கு பல்வேறு பிரபலங்கள் வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். தற்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னரும் தனது மனைவியுடன் இணைந்து 'புட்ட பொம்மா' பாடலுக்கு டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார்.

இந்த டிக் டாக் வீடியோவைத் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து, "இது டிக்டாக் நேரம். புட்ட பொம்மா. உங்களுக்கு சவுகரியமாக இருக்கும் சூழலிலிருந்து வெளியே வாருங்கள் மக்களே" என்று குறிப்பிட்டார்.

இந்த வீடியோவுக்கு அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் ட்வீட்டைக் குறிப்பிட்டு டேவிட் வார்னர், "நன்றி சார். அற்புதமான பாடல்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT