தூய்மைப் பாதுகாவலர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சென்னையில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
தூய்மைப் பணியில் ஆங்காங்கே பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சில சமயங்களில் இவர்களிடம் சிலர் அநாகரிகமாக நடந்து கொண்டு துச்சமாக பேசுவதும் நடந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிலர் அது சம்பந்தமான அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர். ஆனால் சரியான தீர்வும் கிடைக்கவில்லை என்று இவர்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை, பெருங்குடி மண்டலத்தில் துப்புரவு ஊழியரை கேவலமாகப் பேசி தள்ளிவிட்ட நபர் மீது புகார் எழ போலீசார் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பள்ளிக்கரணை பகுதியில் தெரு ஒன்றில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளி ஒருவரை நபர் ஒருவர் தன் வீட்டு வாசலில் உள்ள குப்பைகளை அகற்றவில்லை என்று கூறி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் வாய் வார்த்தை முற்றி தொழிலாளியை அந்த நபர் தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு தொழிலாளியை துச்சமாகப் பேசிய அந்த நபரைக் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
இதே போல் மடிப்பாக்கம் பகுதியிலும் குப்பையைத் தரம் பிரித்து வைத்திருக்கும் நிலையில் ஒருவர் வந்து அதில் குப்பையைக் கொட்டியுள்ளார். இதைப்பார்த்த துப்புரவுத் தொழிலாளி அவரைத் தட்டிக் கேட்டார். கோபமடைந்த அந்த நபரும் துப்புரவுத் தொழிலாளரை கண்டபடி ஏசியுள்ளார். இது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
துப்புரவுப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து அகற்றி வருகின்றனர். கரோனா அச்சிறுத்தலிலும் இவர்கள் அயராது பணியாற்றி வருகின்றனர், ஆனால் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும் மக்கள் இவர்களை தரக்குறைவாகப் பேசுவது முறையானது அல்ல என்று சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.