கைலாச நாட்டிற்குச் செல்ல விசா பெறுவதற்கான நடைமுறைகள் என்ன? என்று வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற நித்தியானந்தாவைக் கிண்டல் செய்து அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தங்களின் இரண்டு மகள்கள் கடத்தப்பட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதி போலீஸில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதில், ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல சிறுமிகள் மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை நிர்வகித்து வந்த 2 பெண்களையும் போலீஸார் கைது செய்தனர்.
நித்யானந்தா மீது கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக குஜராத் போலீஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற நித்யானந்தா மத்திய அமெரிக்க நாடான இக்வேடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டு அதற்கான கொடியையும் வெளியிட்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நித்யானந்தாவைக் கிண்டல் செய்யும் வகையில் இந்தியக் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கைலாச நாட்டிற்குச் செல்வதற்கு விசா பெறுவதற்கான என்ன நடைமுறைகள்?'' என அஸ்வின் கிண்டல் செய்துள்ளார்.
What is the procedure to get visa?? Or is it on arrival?