புனே
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவர் தனது பாடல்கள் மூலம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். இதனால் அவர் சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகியுள்ளார்.
புனே முனிசிபல் கார்பரேஷனில் துப்புரவுத் தொழிலாளாராக பணியாற்றி வருகிறார் மாதவ் ஜாதவ். இவரது பணி அனுபவம் 25 ஆண்டு காலம். பணியின்போது தூய்மை விழிப்புணர்வு பாடல்களைப் பாடுவது இவரது வழக்கமாக இருக்கிறது.
இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு மாதவ் அளித்த பேட்டியில், "துப்புரவு செய்தல் எனது தொழில். அதை சுவாரஸ்யமாக்குவதற்காக நான் மக்களுக்கு விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடுகிறேன். என்னை யாரும் பாடும்படி பணிக்கவில்லை. எனக்காகவே தோன்றியது. அதனால் அவ்வாறு செய்கிறேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
ஒவ்வொரு நாளும் மக்களிடம் வாய் வார்த்தையாக ஈரக் கழிவுகளை ஒரு கூடையிலும், காய்ந்த கழிவுகளை இன்னொரு கூடையிலும் பிரித்து வைக்குமாறு சொல்லிவந்தேன். அந்த வாய்ச்சொல்லுக்கு எந்த பலனும் இல்லை. அதனாலேயே நான் பாடல்கள் மூலம் விழிப்புணர்வைத் தொடங்கினேன்.
அதன் பின்னர் மக்கள் மத்தியில் நல்ல மாற்றம் தெரிகிறது. நான் துப்புரவு பணி மேற்கொள்ளும் பகுதியில் 60% மக்கள் புரிதலோடு குப்பைகளைத் தரம் பிரித்து வைக்கின்றனர்.
விழிப்புணர்வு பாடல்கள் எல்லாம் பிரபல பாலிவுட் பாடல்களின் மெட்டுதான் என்றாலும் அவற்றிற்கான கவிதைகளை நானே உருவாக்குகிறேன்" என்றார்.
அவர் பாடும் விழிப்புணர்வு பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கான லின்க்:
- ஏஎன்ஐ