சமூக வலைதளம்

'என்னைத் தொடாதீர்கள்': விமர்சனத்துக்குள்ளான  'ரயில் பாடகி' ரானு மோண்டலின் செய்கை

செய்திப்பிரிவு

இணையம் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்கும் கொண்டு செல்லும் , கோபுரத்திலிருந்து கீழே இறக்கியும் வைக்கும்.

அதுதான் 'ரயில் பாடகி' ரானு மோண்டலுக்கு நடந்திருக்கிறது.

ட்விட்டரால் புகழின் உச்சிக்குச் சென்ற ரானு மோண்டல் மீண்டும் வைரலாகி இருக்கிறார். ஆனால் இம்முறை மகிழ்ச்சியான விஷயத்துக்காக அல்ல.

சில மாதங்களுக்கு முன்னர் கொல்கத்தா ரனகாட் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் ரானு மோண்டல் என்ற ஆதரவற்ற பெண் பிரபல இந்திப் பாடகியான லதா மங்கேஷ்கரின் 'ஏக் பயார் கா நக்மா ஹா' என்ற பாடலைப் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

குறிப்பாக ட்விட்டரில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ட்விட்டராட்டிகள் ரானுவை புகழின் உச்சியில் ஏற்றிவைத்தனர். சமூக ஊடக வெளிச்சத்தால் அவருக்கு பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்தது. பிரபல இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா தனது இசையமைப்பில் ரானுவைப் பாட வைத்தார்.

இந்நிலையில், ரானுவின் இன்னொரு வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. தற்போது உலாவரும் அந்த வீடியோவில் ரானு ஒரு பலசரக்குக் கடையில் இருக்கிறார். அவரை அடையாளம் கண்டு கொண்ட அங்கிருந்த பெண் ஒருவர் ரானுவின் தோளில் தட்டி அழைக்கிறார். உடனே திரும்பிப் பார்க்கும் ரானு என்னைத் தொடாதீர்கள்.. என்ன செய்கிறீர்கள்? இப்படித் தட்டிக் கூப்பிடுகிறீர்களே.. இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார். அவர் குரலில் கோபம் ஏதும் தெரியவில்லை. இருப்பினும் தான் ஒரு பிரபலமாகிவிட்டதாக ரானு உணர்ந்ததாலேயே இவ்வாறான போக்கைக் கடைபிடித்திருக்கிறார். இது கர்வம் என சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ட்விட்டர் பயன்பாட்டாளர் ஒருவர், "நாங்கள்தான் இவரைப் பிரபலமாக்கினோம்.. ஆனால் இப்போது இவர் ஆணவம் காட்டுகிறார்.." என விமர்சித்திருக்கிறார்.

சிலர் ரானு மீது தவறில்லை, செல்ஃபி எடுக்க விரும்பினால் அதை முறையாகக் கேட்டு எடுக்க வேண்டுமே தவிர நமக்கு நன்கு அறிமுகமானவர் போல் தோளில் தட்டுவது மேட்டிமைத்தனம் என்றும் விமர்சித்துள்ளனர்.

ரானுவை பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் விமர்சித்தபோது நாங்கள் அவருக்கு ஆதரவாகப் பேசினோம். இன்று ரானு செய்தது தவறு என்பதால் அதையும் சுட்டிக்காட்டுகிறோம். நாங்கள் நடுநிலையாளர்கள் என்று இன்னொரு ட்விட்டராட்டி கூறியிருக்கிறார்.

"என்னுடைய பெயரால் ஒருவர் பலனடைந்தால் அது என்னுடைய அதிர்ஷ்டம். ஆனால் ஒருவரை நகலெடுப்பது என்பது நிலையான நீடித்த வெற்றியைத் தராது என்று நினைக்கிறேன்” என ரானுவைப் பற்றிய கேள்விக்கு லதா மங்கேஷ்கர் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரானுவின் வைரல் வீடியோ..

SCROLL FOR NEXT