சமூக வலைதளம்

சுஜித்துக்காக துயரப்பட்டவர்களின் கவனத்துக்கு..!

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது 2 வயதுக் குழந்தை சுஜித்தின் மரணம்! திருச்சி, நடுக்காட்டுப் பட்டியில் உள்ள தங்களின் தோட்டத்தில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுஜித், அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். 82 மணி நேர மீட்புப் போராட்டத்துக்குப் பிறகு, சடலமாகிவிட்டிருந்த சுஜித்தைப் பார்த்தது ஆறாத் துயரம்; மீளா வேதனை!

இந்தத் துயரம் இனியும் வரக்கூடாது நமக்கு. இப்படியொரு வேதனை இனி எங்குமே நடந்துவிடக்கூடாது. அழுது மாய்ந்த கண்களைத் துடைத்துக்கொண்டு, காரியமாற்றக் களமிறங்குவதுதான் சுஜித்துக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி. நெஞ்சடைத்துக் கிடக்கிற சோக பாரத்தை ஓரமாக வைத்துவிட்டு, ஆழ்துளைக் கிணறுகள் சவக்குழியாகி விடாமல் தடுப்பதற்கான பணிகளே நாம் அந்தக் குழந்தையின் கல்லறையில் வைக்கிற ஒற்றை ரோஜா!

அவலம் கண்டு பொங்கிப் பிரவாகிக்கிற நாம், நம்மூரில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிவோம். அதை மூடுவதற்கோ அல்லது அதை மழை நீர் சேகரிப்புக்கான தளமாக்குவதற்கோ அரசின் துணை கொண்டு முயற்சி மேற்கொள்வோம்.

மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள், கவனிக்கப்படாத தரைக் கிணறுகள், ஆபத்தை ஏற்படுத்தும் பள்ளங்கள், குழிகள் என உங்களைச் சுற்றியிருக்கும் இடங்களை எங்களிடம் தெரிவியுங்கள். நண்பர்களிடமும் உறவுகளிடமும் விசாரித்து அங்குள்ள ஆபத்தான இடங்களைப் புகைப்படம் எடுத்து, ஊரின் பெயர், தாலுகா, மாவட்டம், பின்கோடு முதலான விவரங்களுடன் 7338771000 எனும் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள் (இந்த எண் வாட்ஸ் அப்புக்கு மட்டுமே!)

அதேபோல ramaniprabhadevi.s@hindutamil.co.in என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும், இந்து தமிழ் ஃபேஸ்புக் இன்பாக்ஸ் வழியாகவும் விவரங்களைத் தெரிவிக்கலாம்.

இனியொரு குழந்தைக்கு சுஜித்தின் கதி வரச் செய்யாமல் இருப்பதும் அதற்கான முன்முனைப்பில் நாம் கரம் கோத்து ஈடுபடுவதும்தான்... இதுவரை இறந்துவிட்ட சுஜித்துகளின் ஆத்மாக்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

ஊர் கூடுவோம்... எல்லோரும் இனிதே வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம்!

SCROLL FOR NEXT