ப்ரியங்கா கந்த்வால் 
சமூக வலைதளம்

பாலிவுட் நடிகை மதுபாலாவின் மறுபிறவி: ரசிகர்கள் கொண்டாடும் டிக் டாக் பிரபலம்

செய்திப்பிரிவு

எந்த சமூக வலைதளப் பக்கமாக இருந்தாலும் டிக் டாக் வீடியோக்கள் இன்றி முழுமையடையாது என்கிற அளவுக்கு எல்லா இடங்களிலும் பள்ளி, கல்லூரி இளைஞர்கள் டிக் டாக் மோகம் கொண்டிருக்கிறார்கள்.

இதில் பெரும்பாலான வீடியோக்கள் பிரபல திரைப்பட வசனங்கள், பாடல்கள், நடிப்பு, நகைச்சுவை என திரைப்படங்களைச் சுற்றியே இருக்கின்றன. முக்கியமாக இப்படி டிக் டாக் வீடியோக்கள் பதிவேற்றிய பிரபலமானவர்களும் இருக்கின்றனர்.

பிரபல நட்சத்திரங்களைப் போல ஒப்பனை செய்துகொண்டு வீடியோ பதிவேற்றுபவர்கள் மத்தியில் ஒரு சில பயனர்கள் அந்த நட்சத்திரங்களைப் போலவே இருப்பதும் உண்டு. அப்படி சமீபத்தில் பிரபலமாகியிருக்கிறார் தொலைக்காட்சி நடிகை ப்ரியங்கா கந்த்வால் என்பவர்.

40-களின் இறுதியில் ஆரம்பித்து 60-கள் வரை பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை மதுபாலா. இவருக்கென இன்றுவரை ரசிகர் கூட்டம் உள்ளது. கிட்டத்தட்ட 73 திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.


'ரியல்' மதுபாலா

பார்ப்பதற்கு இவரைப் போலவே இருக்கும் ப்ரியங்கா கந்த்வால், மதுபாலாவின் பிரபல பாடல்கள், வசனங்களை வைத்து டிக் டாக் வீடியோக்களைப் பதிவேற்ற, பாலிவுட் ரசிகர் கூட்டம் இவரை இணையத்தில் வைரலாக்கிவிட்டது. டிக் டாக்கின் மதுபாலா என்றே இவர் புகழ் பாடுகின்றனர்.

"பார்ப்பதற்கு எப்படி மதுபாலாவைப் போலவே இருக்கிறார், நம்பவே முடியவில்லை"

"இவர் ஹைதராபாதின் மதுபாலா"

"அப்படியே மறுபிறவி"

எனப் பலநூறு கருத்துகளுடன் இவரது வீடியோக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு சிலர், பிரபல பாலிவுட் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை டேக் செய்து இந்த வீடியோக்களைப் பகிர்ந்து, ப்ரியங்காவை நடிக்க வைக்கப் பரிந்துரைத்தும் வருகின்றனர்.


'ரீல்' மதுபாலா

இதையெல்லாம் பார்த்த ப்ரியங்கா, ரசிகர்களுக்கு நன்றி சொல்லி ஒரு வீடியோவைப் பதிவேற்றியுள்ளார்.

"எல்லோருக்கும் நன்றி. மதுபாலா கண்டிப்பாக ஒரு அதிசயம். அவரோடு எந்த ஒப்பிடலும் வேண்டாம். இதெல்லாம் விளையாட்டாக நான் செய்தவையே. நீங்கள் பாராட்டுவீர்கள் என்றெல்லாம் நான் யோசிக்கவே இல்லை" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT