நியூயார்க்
அமெரிக்காவில் சிங்கத்தின் முன் இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரான்க்ஸ் உயிரியல் பூங்கா (Bronx Zoo) உள்ளது. இதில் உள்ள விலங்குகளையும் உயிரினங்களையும் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் மக்களும் வருவர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் இங்கு வந்த இளம்பெண் ஒருவர், பாதுகாப்பு வேலியைத் தாண்டி சிங்கம் இருக்கும் இடத்துக்குள் நுழைந்தார். சிறிதும் அச்சப்படாமல் மரத்துக்கு அருகில் நின்று கொண்டிருந்த சிங்கத்தை நோக்கிச் சென்றார்.
சிங்கத்தைப் பார்த்துக் கைகளை அசைத்து நடனமும் ஆடினார். கிண்டலாகச் சிரித்தார். சிங்கமும் அந்தப் பெண்ணை எதுவும் செய்யாமல் அவரது அசைவுகளையே பார்த்தபடி நின்றது. ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்தக் காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
எனினும் பூங்கா நிர்வாகம் இளம்பெண்ணின் செயலைக் கண்டித்துள்ளது. முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுபோன்ற ஆபத்தான செயலை யாரும் ஊக்குவிக்கக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.