சமூக வலைதளம்

கேரளாவில் சாலை விதியை மீறி வந்த பேருந்தை வழிமறித்த பெண்: வைரலான வீடியோ

செய்திப்பிரிவு

கேரளாவில் விதிகளை மீறி சாலையில் வந்த அரசுப் பேருந்தை நிறுத்திய பெண்ணுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சாலை விதிகளை சரியாகப் பின்பற்றி விபத்துகளைத் தவிர்க்க எவ்வளவு விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் சாலை விதிகளை மீறவதும் விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கின்றன. சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி வாகனங்களை ஓட்டுபவர்கள் அரிதாகி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் விதிகளை மீறி வந்த அரசுப் பேருந்தை பெண் ஒருவர் வழிமறித்த சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவில் இருவழிச் சாலையில் வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சாலை விதிகளை மீறி மறுபக்கம் செல்ல முயன்றார். அப்போது அந்தச் சாலையில் எதிர் திசையில் ஸ்கூட்டியில் வந்த பெண் ஒருவர் அந்தப் பேருந்துக்கு வழிவிடாமல் மறித்து பேருந்தை நிறுத்தினார். பின்னர் அப்பேருந்தின் ஓட்டுநர் சரியான பாதையில் பேருந்தைச் செலுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்தச் சம்பவம் எப்போது நடந்தது என்பதற்கான தகவல் இல்லை.

இவ்வீடியோவைக் குறிப்பிட்டு நீங்கள் சரியாக இருந்தால், நிச்சயம் அது உங்களுக்கு வலிமையை அளிக்கும் என்று நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டு அப்பெண்ணின் தைரியத்தைப் பாராட்டியிருந்தார்.

சாலை விதிகளை மதித்து, பேருந்தை நிறுத்திய பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT