சீட் பெல்ட் அணிவதால் நன்மை என்ன என்பது குறித்து விளக்கும் லைவ் வீடியோ வைரலாகி வருகிறது.
விபத்துகளைக் குறைக்கவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும், விபத்தில் உயிரிழப்போர், காயமடைவோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு போன்றவற்றை அதிகரித்து வழங்கவும், காலத்துக்கு ஏற்றவகையில் மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்தி மோட்டார் வாகனச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்தது. மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிமுறைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை காவல்துறை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல மக்களும் விழிப்புணர்வுப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ட்விட்டர் பயனர் ஒருவர், சீட் பெல்ட் அணிவதால் ஏற்படும் நன்மை என்ன என்பது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதன்படி, போக்குவரத்தில் ஆண் ஒருவர் சீட் பெல்ட் அணிந்தவாறு காரில் பயணிக்கிறார். சீரான வேகத்தில் அவர் செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்து லாரி ஒன்று காரின் மீது மோதுகிறது. இதனால் நிலை தடுமாறி கார் சாய்கிறது.
சீட் பெல்ட் போட்டிருப்பதால், உடனே காரின் ஏர்பேக் விரிந்து அவரைக் காப்பாற்றுகிறது, உடனே காரில் இருந்து அவர் வெளியேறுகிறார். இதுதொடர்பான லைவ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவைக் காண