நான் என்றும் மறக்காத ஓர் இரவு என்று தோனியுடன் தான் விளையாடிய புகைப்படத்தைப் பதிவிட்டு இந்திய கேப்டன் கோலி நினைவு கூர்ந்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு நடந்த 20 -20 உலகக்கோப்பை போட்டியின்போது காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த ரன்களை எடுக்க இந்தியா திணறியது. இந்திய அணி வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க கோலி ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை ஆடினார்.
இந்நிலையில் யுவராஜ் விக்கெட் விழ, அடுத்து தோனியுடன் கைகோர்த்த கோலி, அதிரடியாக விளையாடவில்லை. மாறாக, இருவரும் ஓடியே ரன்களைச் சேர்த்தனர். இறுதி 6 ஓவரில் இந்தியா வெற்றி பெற 60 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்த இலக்கை எட்ட தோனியும், கோலியும் 5 பந்துகள் மிச்சமிருக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் கோலி - தோனி சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
தோனி தற்போது இந்திய அணியில் இடம்பெறாத நிலையில் இதனை தற்போது கோலி பகிர்ந்துள்ளார்.
அப்போட்டியில் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “ இந்தப் போட்டி என்னால் மறக்க முடியாதது. மறக்க முடியாத இரவு அது. இந்த மனிதர் என்னை உடற்பயிற்சி சோதனை தேர்வு போல என்னை அப்போட்டியில் ஓடச் செய்தார்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இப்பதிவையும் கோலி - தோனி இடையேயான நட்புறவையும் பாராட்டி வருகின்றனர்.