விக்ரம் லேண்டர் இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டுத் தளத்துடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டி நாக்பூர் நகர போலீஸார் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ட்வீட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீப நாட்களாக பரபரப்பாகப் பேசப்படும் இரண்டு விஷயங்கள், சந்திரயான் 2 மற்றும் புதிய மோட்டார் வாகன விதி.
திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன விதி நாடு முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது. டெல்லியில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு ரூ.23,000 அபராதன், ஒடிசாவின் லாரி ஓட்டுநருக்கு ரூ.80,000 அபராதம் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அதேவேளையில் செப் 7 முதல் சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் இன்னொரு பரபரப்பு பேசுபொருள் ஆகியிருக்கிறது. நிலவிலிருந்து 2.1 கி.மீட்டர் தூரத்திலிருந்தபோது லேண்டர் இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டுத் தளத்துடன் தொடர்பை இழந்தது.
இந்நிலையில், நாக்பூர் போலீஸார் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் இரண்டையும் ஒருங்கிணைத்து நகைச்சுவை உணர்வுடன் ஒரு ட்வீட் பதிவு செய்திருக்கின்றனர்.
ஒரே நேரத்தில் தேசத்தின் சாதனை முயற்சி மீதான தங்களின் பற்றையும், போக்குவரத்து விதியை மக்கள் பின்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தையும் நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
நாக்பூர் போலீஸார் பதிவு செய்த அந்த ட்வீட்டில், "விக்ரம் லேண்டர்.. தயவு செய்து தொடர்பை ஏற்படுத்தவும். சிக்னல் விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் ஏதும் விதிக்கப்படாது" எனப் பதிவிடப்பட்டுள்ளது.
#VikramLanderFound #ISROSpotsVikram போன்ற ஹேஷ்டேகுகளின் கீழ் இந்த ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேண்டரை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் வலியுறுத்தியுள்ள நிலையில் நாக்பூர் போலீஸாரின் இந்த ட்வீட் கவனம் ஈர்க்கிறது.