சமூக வலைதளம்

ஆசிரியர் தினத்தை சிறப்பிக்க அனிமேஷன் டூடுல் வெளியிட்ட கூகுள்

செய்திப்பிரிவு

ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் அனிமேஷன் டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

ஆண்டின் அனைத்து நாட்களிலும் அந்தந்த நாளின் சிறப்பை உணர்த்த உலகம் முழுவதும் பல்வேறு பிரபலங்களையும், பல்வேறு தினங்களையும் கவுரவிக்கும் வகையில் கூகுள் தேடுபொறி தளம் தனது முகப்புப் பக்கத்தில் டூடுல் வெளியிட்டு வருகிறது.

இன்று (செப்டம்பர் 5) இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. தேசத்தின் முதல் குடியரசு துணைத் தலைவரும், 2-வது குடியரசுத் தலைவருமான டாக்டர் ராதாகிருஷ்ணனை கவுரவிக்கும் வகையில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், கூகுள் இன்றைய (செப். 5 2019) ஆசிரியர் தினத்தை சிறப்பித்து அனிமேஷன் டூடுலை வெளியிட்டுள்ளது.

அந்த அனிமேஷன் காட்சியில் ஆக்டோபஸ் என்ற கடல்வாழ் உயிரினம் மீன்களுக்கு கணிதம், வேதியல் போன்ற பல்வேறு பாடங்களைக் கற்பிப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. கண்கவர் வண்ணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தினம் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. யுனஸ்கோ அமைப்பு அக்டோபர் 5-ம் தேதியையே சர்வதேச ஆசிரியர் தினமாகக் அறிவித்திருக்கிறது.

ஆனால் பல நாடுகளும் இந்தியாவைப் போலவே தங்கள் நாட்டில் கல்விக்காக தொண்டாற்றிய தலைவர்களைக் கொண்டாடும் வகையில் ஆசிரியர் தினத்தை அவர்களின் பிறந்தநாளில் கொண்டாடுகிறது.

உதாரணத்துக்கு கோஸ்டாரிக்காவில் நவம்பர் 22, செக் குடியரசில் மார்ச் 28, ஈகுவேடாரில் ஏப்ரல் 13, ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதத்தின் கடைசி வெளிக்கிழமை, அமெரிக்காவில் மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை, அல்பேனியாவில் மார்ச் 7 என ஆசிரியர் தினம் பல தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

SCROLL FOR NEXT