சமூக வலைதளம்

ட்விட்டர் தலைமை அதிகாரியின் சொந்தப் பக்கம் முடக்கம்: பயனர்கள் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

ட்விட்டர் துணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜேக் டார்சியின் சொந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்து. இதனால் ட்விட்டர் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜேக் டார்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தைச் சுமார் 40 லட்சம் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் திடீரென நேற்று அவரின் பக்கத்தில் இருந்து வன்முறை மற்றும் இனவாதத் தாக்குதல்களை வெளிப்படுத்தும் ட்வீட்கள் பதிவிடப்பட்டன. தொடர்ச்சியாக சுமார் 15 நிமிடத்துக்கு இந்த ட்வீட்கள் வெளியாகின.

குறிப்பாக #Chuckling Squad என்ற ஹேஷ்டேகுடன் இந்தப் பதிவுகள் ட்வீட் செய்யப்பட்டன. இதனால் சக்ளிக் ஸ்க்வாட் என்று அழைக்கப்படும் ஹேக்கிங் கும்பல் இதைச் செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்த ட்விட்டர், ஜேக் டார்சியின் ட்விட்டர் பக்கத்தை மீட்டது. மேலும் தங்களுடைய பாதுகாப்பு செயல்முறையில் எந்தத் தவறும் இல்லை எனத் தெரிவித்த ட்விட்டர், மொபைல் சேவை வழங்குநரைக் குற்றம் சாட்டியது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மொபைல் சேவை வழங்குநரின் பாதுகாப்பு மேற்பார்வையில் ஏற்பட்ட பிரச்சினையால் ட்விட்டர் கணக்கில் குளறும்படி ஏற்பட்டது.

மொபைல் எண் பிரச்சினையால், குறுஞ்செய்தி மூலம் அடையாளம் தெரியாத நபர், ட்வீட்களைப் பதிவிட்டுள்ளார். இது உடனடியாகக் கண்டறியப்பட்டு, சரி செய்யப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரியின் கணக்கே முடக்கப்பட்டதால், அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ட்விட்டர் பயனர்கள் சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT