லஞ்சம் வாங்குவதுபோல் ப்ரீ வெட்டிங் ஷூட் எடுத்த ராஜஸ்தான் காவலர் ஒருவரை காவல்துறை உயரதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எல்லாமே சினிமா பாணியாகிவிட்ட இந்த காலத்தில் திருமணத்துக்கு முன் ப்ரீ வெட்டிங் ஷூட், அப்புறம் போஸ்ட் வெட்டிங் போட்டோ செஷன், திருமணத்தில் டிஜே கொண்டாட்டம் என்றெல்லாம் அவரவர் வசதிக்கேற்ப நிஜ திருமணங்களில் சினிமாத்தனம் அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில்தான் ராஜஸ்தானில் போலீஸ்காரர் ஒருவர் தனது ப்ரீ வெட்டிங் ஷூட்டால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
யூடியூபில் வைரலான அந்த ப்ரீ வெட்டிங் வீடியோவில் தன்பத் என்ற காவலர் அவரின் வருங்கால மனைவியாகப் போகும் பெண்ணை(இப்போது திருமணம் முடிந்துவிட்டது) ஹெல்மெட் அணியாததற்காக தடுத்து நிறுத்துகிறார்.
அப்போது அந்தப் பெண் கொஞ்சலுடன் மன்னிப்பு கேட்டு அவரின் பையில் லஞ்சமாக பணத்தைவைத்துவிட்டு காவலரின் பர்ஸையும் பிக் பாக்கெட் அடித்துவிட்டுச் செல்கிறார்.
அந்த பெண் கடந்து சென்ற பின்னரே பர்ஸ் திருடுபோனதை அறிந்த காவலர் மீண்டும் அந்தப் பெண்ணை தேடிச் செல்கிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. பின்னணியில் பாலிவுட் காதல் பாடல்கள் இசைக்க காட்சிகள் சினிமாவை விஞ்சும் அளவுக்கு தரமான கேமராவில் அழகாகவே படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், தன்பத் மட்டும் காவலர் சீருடையில் இல்லாமல் இந்த வீடியோ உருவாக்கப்பட்டிருந்தால் எந்த சர்ச்சையும் ஏற்பட்டிருக்காது
தன்பத் உதய்பூர் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றுகிறார். அவரின் ப்ரீ வெட்டிங் ஷூட்டைப் பார்த்த உயரதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முன்னதாக, சட்டம் ஒழுங்கு ஐஜி டாக்டர் ஹவா சிங் கொமாரியா அனைத்து காவல்நிலையங்களுக்கு ஓர் அறிக்கை அனுப்பியிருந்தார். அதில் சீருடையை துஷ்பிரயோகம் செய்யும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்த அறிக்கையின்படி சித்தோர்கர் பகுதியைச் சேர்ந்த காவலர் ஒருவரே இந்த வீடியோவை காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
இதனையடுத்து ஐஜி பிறப்பித்த அறிக்கையில் புதிதாக இன்னொரு கட்டுப்பாடும் விதிக்கப்ப்பட்டுள்ளது. அதன்படி ப்ரீ வெட்டிங் ஷூட்டுக்கு யாரும் காவலர் சீருடையை அணியக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.